சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகி இருக்கும் ஆதவ் அர்ஜுனா, அதிமுக அல்லது தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் உலாவுகின்றன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய அவர் காய் நகர்த்தி வருவதாகவும், பொருளாளர் அல்லது துணை பொது செயலாளர் பதவியை எதிர்பார்ப்பதாக கூறுகின்றனர்.
கட்சியில் சேர்ந்த 21 நாட்களில் துணை பொது செயலாளர் பதவியை பெற்ற நிலையில், 11 மாதங்களிலேயே கட்சியை விட்டு விலகி இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா.
பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மருமகனான அவர் ஏற்கனவே ஒன் மைண்ட் இந்தியா, வாய்ஸ் ஆப் காமன் ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். தேர்தல் வியூகத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் திமுகவுக்காக பணியாற்றியவர்.
தொடர்ந்து அவர் அரசியலில் குறிக்கப் போகிறார் என்ற தகவல் அப்போது மேல்மட்ட நிர்வாகிகளிடையே பேசு பொருளாக இருந்தது. ஆனால் திமுகவில் இணையாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இணைந்தார். தொடர்ந்து இரண்டு மூன்று வாரங்களிலேயே அவருக்கு துணை பொது செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடுகள், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது, சமூக வலைதள பக்கங்களை கையாள்வது என அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இடையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு விஜய் ஆதரவு நிலைப்பாடு என ஆதவ் அர்ஜுனாவின் போக்கு மற்ற சீனியர்களுக்கு பிடிக்கவில்லை. தொடர்ந்து அவர் மீது புகார்கள் பறந்த நிலையில் புத்தக வெளியீட்டு விழாவில் திமுக குறித்த அவரது நேரடியான விமர்சனம் அந்த கட்சி நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்தது. இதை அடுத்து ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் கட்சியில் இருந்து தானே விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிக்கை வெளியிட்டார்.
அவர் அவசரப்பட்டு விட்டதாக திருமாவளவன் கூறியிருந்தார். இந்த நிலையில் அதிமுக, தமிழக வெற்றிக்கழகத்தை குறி வைத்தே ஆதார் அர்ஜுனா கட்சியிலிருந்து வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. வரும் தேர்தலில் அதிமுகவுக்கு தேர்தல் வியூகங்கள் வகுத்துக் கொடுப்பதோடு தேர்தலிலும் போட்டியிடலாம் என ஒரு தரப்பு கூறுகிறது.
அதே நேரத்தில் ஆதவ் அர்ஜுனாவின் டார்கெட்டே தமிழக வெற்றி கழகம் தான் எனவும் ஆரம்பத்திலிருந்து விஜய் ஆதரவு நிலைப்பாட்டை அவர் எடுத்து வந்திருக்கிறார். இதனால் தமிழக வெற்றி கழகத்தில் தான் அவர் இணைவார் என்கின்றனர் அவரது அரசியலை கவனிக்கும் அரசியல் நிபுணர்கள். மேலும் தமிழக வெற்றி கழகத்தில் பொருளாளர் பதவியை எதிர்பார்த்து இருப்பதாகவும் அல்லது புஸ்ஸி ஆனந்துக்கு அடுத்து துணை பொது செயலாளர் பதவியை எதிர்பார்க்கிறார் ஆதவ்.
இதற்காக பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது விரைவில் அதற்கான அறிவிப்பும் இருக்கும் என்கின்றனர். இதற்கு வலுவான காரணங்களும் உண்டு. விஜய் கட்சி ஆரம்பித்த போதே மாநாட்டிலேயே கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என பேசினார். அதே கருத்தை தான் ஆதவ் அர்ஜுனா பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல்வேறு விவகாரங்களில் விஜய் ஆதரவு நிலைப்பாட்டையே ஆதவ் அர்ஜுனா எடுத்திருக்கிறார். இதன் மூலம் அதிமுகவை விட தமிழக வெற்றி கழகத்திற்கு அவர் செல்வதற்கே வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.