தூத்துக்குடிக்கும் கள்ளக்குறிச்சிக்கும் சென்றது சடங்கு தானா? - விஜயை மீண்டும் விமர்சித்த சீமான்!

post-img
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் தலைவர்கள் சந்திப்பது குறித்து நடிகர் விஜய் தெரிவித்த கருத்துக்கு சீமான் காட்டமாக பதில் கொடுத்துள்ளார். சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்றிருந்த நடிகர் விஜய், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் தலைவர்கள் சந்திப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இது விவாதமாக மாறியது. இந்த நிலையில்தான் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயின் இந்த கருத்துக்கு பதில் கொடுத்துள்ளார். அதில், “விஜய் மிகப்பெரிய திரைப்பட நடிகர். அவர் பொது இடத்துக்கு வரும்போது அவரை பார்க்க மக்கள் நிறைய வருவார்கள். போக்குவரத்து உள்ளிட்ட சிக்கல் எழும். அதனால் வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு மக்களை அவர் நேரில் வந்து சந்திப்பதை தவிர்த்துக் கொண்டது சரி. ஆனால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்ப்பது ஒரு சடங்கு என நடிகர் விஜய் கூறி இருக்கக் கூடாது. அது தவறான வார்த்தை. விஜய் அப்படி சொல்லியிருக்க கூடாது. அப்படியெனில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களையும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் இறந்தவர்களையும் விஜய் சந்தித்தது ஏன்?. அப்போது அது வெறும் சடங்குதானா?. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறுவது அவர்களது கடமை” என்று தெரிவித்தார். தொடர்ந்து அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சீமான், அம்பேத்கரின் பெயரை சொன்னவர் தான் அயோத்தியில் வெற்றி பெற்றார் என்றார். மக்களின் பிரச்சனைகளை திசை திருப்பவே அம்பேத்கர் குறித்து பேசுகிறார்கள் என்றும் சீமான் கூறினார். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றும் சட்டங்களுக்கு ஆளுநர் கையெழுத்திட மறுப்பது தவறு எனவும் அவர் கூறினார்.

Related Post