மலையாளத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்.. வியந்து பார்த்த கேரள முதல்வர் பினராயி விஜயன்!

post-img
வைக்கம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று கேரள மாநிலம் வைக்கம் நகரில் நடைபெற்ற பெரியார் நினைவகம் மற்றும் நூலகத் திறப்பு விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் சிறிது நேரம் மலையாளத்தில் பேசினார் முதல்வர் ஸ்டாலின். பெரியார் தலைமையில் நடந்த வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, வைக்கத்தில் இன்று நடைபெற்ற புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்வில் பேசும்போது, சில வரிகள் மலையாளத்தில் பேசினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். மலையாளத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்: முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "இன்னு சரித்திரத்திண்டே ஏடுகளில், தங்க-லிபிகளில் ரேகப்பெடுத்தேண்ட திவசமாணு. ப்ரவேஷனம் நிஷேதிகப்பட்ட வைக்கத்து தந்தை பெரியாரினு நம்மள் ஒரு ஸ்மாரகம் நிர்மிச்சிட்-உண்டு. ஒரிக்கல், தந்தை பெரியாரினெ அரெஸ்ட்டு செய்து ஜெயிலில் அடைச்ச வைக்கத்து-தன்னெயாணு தமிழ்நாடு, கேரள சர்க்காருகளுடெ பேரில் நம்மள் ஆகோஷிக்குன்னது." என மலையாள மொழியில் பேசினார். (தமிழாக்கம்: இன்று வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்! எந்த வைக்கம் நகருக்குள் நுழையக் கூடாது என்று தந்தை பெரியார் தடுக்கப்பட்டாரோ - எந்த வைக்கம் நகரில் கைது செய்யப்பட்டாரோ, அதே வைக்கம் நகரில் இன்று மாபெரும் நினைவகத்தை எழுப்பி, தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளின் சார்பில் மாபெரும் விழாவை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.) இதுதான் வெற்றி: தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "தந்தை பெரியாருக்கு எதிராக யாகம் நடந்த ஊரில், இன்றைக்கு புகழ்மாலை சூட்டியிருக்கக்கூடிய நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுதான் பெரியாரின் வெற்றி! பெரியாரியத்தின் வெற்றி! திராவிட இயக்கத்தின் வெற்றி! அந்த வகையில் சமூகநீதியின் வரலாற்றிலும், இந்த நாள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்! பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களுடைய முன்னிலையில், பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான நான், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்புடன் இந்த நினைவகத்தை திறந்து வைப்பதில், எனக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய வரலாற்றுப் பெருமையாக அமைந்திருக்கிறது!" என்றார். எத்தனை தடைகள் வந்தாலும் உடைப்போம்: தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, தெருவில் நடந்தால் தீட்டு என்ற காலத்திலிருந்து கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலையை நோக்கி இன்று அடைந்திருக்கிறோம்! தமிழ்நாட்டைப் போலவே கேரளத்திலும் பல புரட்சிகரமான முற்போக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. வைக்கம் போராட்டத்திற்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது. அந்தப் போராளிகளை போற்றுவதற்காக மட்டுமல்ல! அவர்கள் விரும்பிய சமநிலைச் சமுதாயத்தை அமைப்பதற்கான நம்முடைய கடமையில் முன்னேறிச் செல்ல! தமிழ்நாட்டிலும் பல கோயில் நுழைவு போராட்டங்கள் நடந்ததற்கு பெரியாரே காரணம். பெரியாரின் போராட்டம் காரணமாகவே கோயிலுக்குள் நுழையும் அனைவரையும் பாதுகாக்க 1939ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. கேரளாவிற்கு வரும் அனைவரும் வைக்கம் நினைவகத்திற்கு வர வேண்டும். வைக்கம் என்பது ஒரு தனிப்பட்ட வெற்றி அல்ல! தொடர் வெற்றிகளுக்கான தொடக்கம்! அந்த தொடர் வெற்றியை எல்லா துறையிலும் அடைய நாம் உறுதியோடு உழைப்போம்! எத்தகைய தடைகள் வந்தாலும், அவற்றை உடைப்போம்! கொண்ட கொள்கையில் வெல்வோம்! ஆதிக்கமற்ற சமத்துவ சமுதாயம் அமைத்தே தீருவோம்! வாழ்க பெரியாரின் புகழ்! வாழ்க பெரியாரின் புகழ்!" எனத் தெரிவித்துள்ளார்.

Related Post