காத்மாண்டு: நேபாளத்தை இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 11 பேர் படுகாயமடைந்தனர். நிலநடுக்கத்தால் வட இந்திய மாநிலங்களும் குலுங்கின.
நேபாள நாட்டில் இன்று பிற்பகல் 2.25 மணிக்கு முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 4.6 ஆக பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து 2-வது முறையாக சிறிது நேரத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவானது. தொடர்ந்து 4 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் குவிந்தனர்.
இந்த நிலநடுக்கமான தரையின் மையப்பகுதியில் இருந்து வெறும் 5 கிமீ ஆழத்தில்தான் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நேபாளத்தின் Bajhang மாவட்டத்தில்தான் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. மேலும் நெடுஞ்சாலைகளில் உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படக் கூடும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மொத்தம் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேபாள நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், நமது நாட்டின் வட இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டது. டெல்லி, ஹரியானா உள்ளிட இடங்களில் மிக கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டன. உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன.
இந்தியாவின் அஸ்ஸாம், மேகாலயா மாநிலங்களில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேகாலயா மாநிலத்தின் காரோ மலைக்குன்று பகுதிகளில் மையம் கொண்டிருந்த இந்நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 ஆக பதிவானது.
குலுங்கிய பூமி.. டெல்லியில் வீடுகளில் எதிரொலித்த நிலநடுக்கம்.. பரவும் ஷாக் வீடியோ! என்ன நடந்தது?
உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய இடத்தில் நேபாளம் உள்ளது. இது தொடர்பாக புவியியல் விஞ்ஞானிகள் ஏற்கனவே நேபாளத்துக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தனர். 2015-ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட அதி பயங்கர நிலநடுக்கமானது உலகையே உலுக்கி எடுத்தது. சாலைகள் இரண்டாக பிளந்தன. கட்டிடங்கள் அப்படியே நொறுங்கி விழுந்தன. அந்த கோர நிலநடுக்கமானது 8,000 பேரை பலி கொண்டது. 21,000 பேர் படுகாயமடைந்தனர். அப்போது நிலநடுக்கமானது ரிக்டரில் 7.8 அலகுகளாக பதிவாகி இருந்தது.
Weather Data Source: Wettervorhersage 21 tage