மக்களே நல்ல காலம் பிறக்குது.. ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்போகுது!

post-img
சென்னை: இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் வேலைவாய்ப்புச் சந்தை ஒரு முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. ஒரு வருட சரிவுக்குப் பிறகு, நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்கி நகர்கிறதாம். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு அறிவியல் (Data Science) போன்ற சிறப்புத் திறன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதும், இரண்டாம் நிலை நகரங்களுக்கு புவியியல் ரீதியாக கவனம் செலுத்துவதும் அடுத்த ஆண்டில் நடக்க உள்ளது. 2024 ஆம் ஆண்டில், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய பணியாளர்களை வேலைக்கு சேர்ப்பதில் சுணக்கம் இருந்தது. ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு நடவடிக்கைகளில் சரிவு காணப்பட்டது. ஆனால், 2025 ஆம் ஆண்டு வளர்ச்சி மற்றும் மீட்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், போர் உள்ளிட்ட உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, முந்தைய ஆண்டை விட சுமார் 7 சதவீதம் வேலைவாய்ப்பில் சரிவு ஏற்பட்டது. ஆனால் இனி அப்படி இருக்காது. அடெக்கோ இந்தியாவின் நாட்டு மேலாளர் சுனில் செம்மங்கோட்டில், இதுகுறித்து கூறுகையில், அடெக்கோ நடத்திய ஆராய்ச்சியின் படி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) துறைகளில் 39 சதவீதம் தேவை அதிகரித்துள்ளது என்று தெரியவந்துள்ளதாம். நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை அளித்ததால், சிறப்புத் திறன்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருந்தது. 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அதாவது இந்த ஆண்டில் கடைசியில், 48 சதவீதம் அதிகரிப்பு காணப்பட்டது. எனவே இது 2025ம் ஆண்டில் தொடரும். நடுத்தர மற்றும் மூத்த நிலை அனுபவம் உள்ள நிபுணர்களுக்கான வேலைவாய்ப்பு 35 சதவீதம் அதிகரித்துள்ளது. சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த ஊழியர்களை விரும்புகின்றன என்பதைக் காட்டுகிறது. புதிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு மந்தமாகவே இருந்தது. டீம்லீஸ் எடுடெக் நிறுவனத்தின் தரவுகளின்படி, பல்வேறு தொழில்நுட்பத் துறைகளில் 2-15 சதவீதம் வரை மட்டுமே வளர்ச்சி விகிதம் இருந்தது. உலகளாவிய அரசியல் சூழ்நிலை காரணமாக ஆட்சேர்ப்புகளை பல நிறுவனங்கள் தாமதப்படுத்தின என்று கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில், தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புச் சந்தை கணிசமாக மீண்டு வரக்கூடும் என்பதற்கான ஊக்கமளிக்கும் அறிகுறிகள் உள்ளன. "2024 ஆம் ஆண்டில், பல நிறுவனங்கள் தங்கள் கேம்பஸ் இன்டர்வியூவை தாமதப்படுத்தியதால், புதிய பணியாளர்களைச் சேர்ப்பது பொதுவாக மந்தமாகவே இருந்தது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இது மாறக்கூடும்.," என்று டீம்லீஸ் எடுடெக்கின் COO மற்றும் வேலைவாய்ப்பு வணிகத் தலைவர் ஜெய்தீப் கேவல்ரமணி கூறினார். பெரிய பொருளாதார நாடுகளில் தேர்தல்கள் முடிந்துள்ளன. இதில் அமெரிக்க தேர்தல் கடைசியாக நடந்து முடிந்தது. எனவே பொருளாதார வளர்ச்சி குறித்து ஐடி நிறுவனங்கள் நம்பிக்கை கொள்ளும் என்றும், மூலதன முதலீடுகளில் சில ரிஸ்குகளை எடுக்க தொடங்கும் என்றும், இது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வேலை வாய்ப்பை அதிகரிக்க தொடங்க உதவும் என்றும் அவர் கூறினார். புதிய ஆட்சேர்ப்பு ஆரம்பத்தில் மந்தமாக இருந்தாலும், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெரிய திட்டங்கள் தொடங்கும்போது, புதிய பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கேவல்ரமணி கூறினார். குறிப்பாக AI மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற பகுதிகளில், வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு மேம்பட்ட பயிற்சி அளிப்பதில் அதிக முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விப்ரோ CTO சந்தியா அருண், "2025 ஆம் ஆண்டு அதிக வேக தொழில்நுட்ப ஆண்டாக இருக்கும், புதிய வாய்ப்புகளை வழங்கும் மற்றும் முன்னெப்போதும் இல்லாத சவால்களை முன்வைக்கும். தொழில்நுட்பத்தையும் அதனால் ஏற்படும் சவால்களையும் ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களுக்கே எதிர்காலம் சொந்தம்..." என்று அருண் கூறினார். புதிய தொழில்நுட்பங்களை அதிகளவில் நம்பியிருப்பதால், சிறப்பு தொழில்நுட்பப் பாத்திரங்களுக்கான தேவை 30-35 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post