மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலி பணியிடங்கள்.. 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

post-img
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் உள்ள தற்காலிக காலிப்பணியிடங்களுக்கு வரும் 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி அறிவித்துள்ளார். நூலகர் மற்றும் புள்ளியியல் நிபுணர், இடைநிலை சுகாதார பணியாளர், பல்நோக்கு ஆஸ்பத்திரி பணியாளர், கதிர்பட பதிவாளர், ஆயுர்வேத டாக்டர், சிகிச்சை உதவியாளர் ஆண், சிகிச்சை உதவியாளர் பெண், செவிலியர் உள்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில், பல் டாக்டர், மாவட்ட தர ஆலோசகர், கணக்கு உதவியாளர், பல் மருத்துவ உதவியாளர், மருந்து வழங்குநர், நூலகர் மற்றும் புள்ளியியல் நிபுணர், இடைநிலை சுகாதார பணியாளர், பல்நோக்கு ஆஸ்பத்திரி பணியாளர், கதிர்பட பதிவாளர், ஆயுர்வேத டாக்டர், சிகிச்சை உதவியாளர் ஆண், சிகிச்சை உதவியாளர் பெண், செவிலியர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கான தகுதி, ஊதியம், மற்றும் விண்ணப்ப படிவம் https://mayiladuthurai.nic.in/notice-category/recruitment/ என்ற இணையத்தளத்தில் காணலாம். விருப்பம் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம், நம்பர் 5, புதுதெரு, எஸ்.எஸ் மஹால் எதிர்புறம், மயிலாடுதுறை 609001, என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்குள் சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சத்துணவு துறையில் 9 ஆயிரம் சமையல் உதவியாளர் பணியிடங்கள்: சத்துணவு திட்டத்தின் கீழ் 9 ஆயிரம் சமையல் உதவியாளர் பணியிடங்களை, தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பிட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது. சமூக நலத்துறை கமிஷனர் கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில், 'தமிழகத்தில் மொத்தமுள்ள 43 ஆயிரத்து 131 சத்துணவு மையங்களில், ஒரு சத்துணவு மையத்துக்கு ஒரு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் என 3 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. அதில், சத்துணவு சமையல் உதவியாளருக்கு சிறப்பு கால முறை ஊதியமாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரையில் வழங்கப்படுகிறது. சத்துணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட, தற்போது காலியாக உள்ள மொத்த பணியிடங்களில், அவசர அவசியம் கருதி, 8 ஆயிரத்து 997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட ஆணை பிறப்பிக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமூக நலத்துறை கமிஷனரின் இந்த பரிந்துரையை, தமிழக அரசு பரிசீலனை செய்தது. அதன்படி, சத்துணவு திட்டத்தில் 8 ஆயிரத்து 997 சமையல் உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளித்தும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீமுரளீதரன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறுகையில், "புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் தொய்வின்றி செயல்பட, இந்த திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களில், 8 ஆயிரத்து 997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், 4 மாதங்களுக்கான தொகை ரூ.10 கோடியே 79 லட்சத்து 64 ஆயிரம் நிதி ஒப்புதல் செய்து ஆணை வெளியிடப்படுகிறது. தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களில், 12 மாதங்கள் திருப்திகரமாக பணியை முடிக்கும் தகுதியான பணியாளர்களுக்கு, சிறப்பு கால முறை ஊதியம் வழங்கப்படும். சமையல் உதவியாளர் பணி நியமனத்துக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதியாக, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியும், தோல்வியும் நிர்ணயம் செய்யப்படுகிறது. சென்னை மாவட்டத்தில் சமையல் உதவியாளர்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட சமூகநலத்துறை இணை இயக்குனர் (சத்துணவு திட்டம்) நியமன அலுவலகராக நியமனம் செய்யப்படுகிறார்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post