சென்னை: குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் சில விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களை குறைபாடாக / சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது என்றும், சரியான சான்றிதழ்களை 21.12.2024 இரவு 11.59 மணிக்குள் பதிவேற்றம் செய்துவிட வேண்டும் என்றும் இது தான் இறுதியான வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. குரூப் 1, குரூப் 2, 2 ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை உரிய தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. இதில்,பத்தாம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 பணியிடங்கள் தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவும்.
இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் போன்ற பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. சில ஆயிரம் பணியிடங்களுக்கு கூட பல லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பிப்பார்கள். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடத்தப்பட்டது. சுமார் 20 லட்சம் பேர் இந்த தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழகம் முழுவதும் 15.88 லட்சம் பேர் எழுதினர்.
3 முறை காலிப்பணியிடங்கள் உயர்த்தப்பட்டு மொத்தம் 9,491 காலிப்பணியிடங்களாக அதிகரிக்கபட்டது. குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் 28 ஆம் தேதி முடிவுகள் வெளியானது. அடுத்த கட்டமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியானதை அடுத்து கட்டமாக ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஜூனியர் உதவியாளர், விஏஒ உள்ளிட்ட பதவிகளுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. தற்காலிக பட்டியலில் இடம்பெற்றவர்கள் 09.11.2024 முதல் 21.11.2024 வரை ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தான், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 21.12.2024 இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும், இது தான் இறுதி வாய்ப்பு என்றும், இதன்பிறகு கால அவகாசம் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ. ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 01/2024, நாள் 30.01.2024 இன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -IV (தொகுதி IV பணிகள் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் சில விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களை குறைபாடாக / சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக 07.12.2024 முதல் 21.12.2024 இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் அவ்விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, அவ்விண்ணப்பதாரர்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு (OTR) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் கோரிக்கை (claim) விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage