இன்றைய இளைய தலைமுறையினர் பெரும்பாலும் நிலையான சம்பளம் அளிக்கும் கார்பரேட் வேலையை மட்டுமே தேடி ஓடி வருகின்றனர். கார்ப்பரேட் வேலைவாய்ப்பில் ஓய்வு பெறும் வரையில் அதிகப்படியான சம்பளத்தை பெற முடியும் வாய்ப்பு இருக்கும் காரணத்தால் சவால் நிறைந்த பிஸ்னஸ் வாய்ப்புகளை தேர்வு செய்ய விருப்பம் இல்லாமல் உள்ளனர்.
ஆனால் இதே இளைஞர்கள் கார்ப்பரேட் வேலையில் சில வருடங்கள் பணியாற்றிவிட்டு, விட்டால் போதுமென சொந்த ஊருக்கு வந்த தொழில் துவங்குவதை சமீபத்தில் பார்க்கிறோம். அதிலும் முக்கியமாக வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு இந்தியா வருபவர்கள் அதிகளவில் விவசாயம் செய்கின்றனர்.
இதேபோல் தான் ஹரிஷ் தன்தேவ் என்பவர் இன்ஜினியரிங் படித்து முடித்து ராஜஸ்தானில் அரசு வேலை பெறுவதற்கான தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இது விவசாயிகளின் குடும்பத்தில் பிறந்த பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய கனவு அரசு வேலை என்பது தான். ஹரிஷ் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் முனிசிபல் கவுன்சிலில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றினார்.
நல்ல அரசு வேலை, பல்வேறு சலுகைகள், நிலையான மற்றும் கைநிறைய சம்பளம் இருந்த போதிலும், ஹரிஷ் தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை, எதையோ இழந்துவிட்டதாக உணர்ந்தார். இந்த சூழ்நிலையில் தான் ஹரிஷ் டெல்லியில் நடந்த ஒரு விவசாய கண்காட்சிக்கு சென்றிருந்தபோது அவருடைய வாழ்க்கை மாறியது. வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு திருப்புமுனை வரும் என்பார்கள், இத்தகைய திருப்புமுனை தான் ஹரிஷ்-க்கு ஏற்பட்டது.
டெல்லியில் நடந்த ஒரு விவசாய கண்காட்சிக்கு சென்ற அவர் பல்வேறு விஷயங்களை பார்த்து வியந்த நிலையில் முழுநேர விவசாயத்தில் இறங்க முடிவு செய்தார், இதற்காக கஷ்டப்பட்டு தேர்வு எழுதி பெற்ற அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
இதன் பின்பு வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு ஜெய்சல்மரில் உள்ள தனது குடும்பத்திற்கு சொந்தமான 120 ஏக்கர் நிலத்தில் ஹரிஷ் விவசாயம் செய்யத் தொடங்கினார். ராஜஸ்தானில் பெரும்பாலான விவசாயிகள் கம்பு மற்றும் கோதுமை ஆகியவற்றை அதிகளவில் பயிரிடுவது வழக்கம்.
இதை அடிப்படையை மாற்றி ஹரிஷ் பலவிதமான கற்றாழையை விளைவிக்க முடிவு செய்தார், இந்த முடிவு தான் பல கோடி ரூபாய் வருமானத்தை ஈட்ட அடிப்படையாக அமைந்தது. கற்றாழை மூலம் எப்படி பல கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும்..? ஹரிஷ் அப்படி என்ன செய்தார்..?
ஹரிஷ் கற்றாழை வளர்ப்பிலும் மிகவும் வித்தியாசமாக வழக்கமான கற்றாழை பயிரிடாமல் பார்பி டெனிஸ் (Barbie Denis) என்ற முக்கிய கற்றாழை வகைகளை பயிரிட முடிவு செய்தார். இது மிகவும் பிரீமியமான கற்றாழை வகைகளில் ஒன்று, இந்த கற்றாழை-க்கு ஹாங்காங், பிரேசில் மற்றும் அமெரிக்காவில் ஆடம்பர அழகுசாதன பொருட்களின் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த விஷயத்தை தான் டெல்லி கண்காட்சியில் ஹரிஷ் கற்றுக்கொண்டார், கற்றாழை வளர வளர அவருடைய வர்த்தகமும் வளர்ச்சி அடைய துவங்கியது. சில மாத காலத்திலேயே ஹரிஷ் ஜெய்சல்மரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் நேச்சர்லோ அக்ரோ (Naturelo Agro) என்ற தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.
இந்த நிலையில் இந்தியாவில் ஆயுர்வேத பொருட்களை தயாரிக்கும் பிரபலமான நிறுவனமான பாபா ராம்தே-வின் பதஞ்சலி உடன் ஹரிஷ் தன்தேவ் இணைந்தார். அலோ வேரா ஜெல் மற்றும் சோப்புகள் போன்ற தயாரிப்புகளுக்காக பதஞ்சலிக்கு அதிகாரப்பூர்வ அலோ வேரா சப்ளையராக மாறினார் ஹரிஷ். இந்த ஒரு வர்த்தக டீல் மூலம் ஹரிஷ் தனது Naturelo Agro ஸ்டார்ட்அப் நிறுவனத்தை மில்லியன் டாலர் நிறுவனமாக மாற்றினார்.
தற்போது Naturelo Agro ஸ்டார்ட்அப் Dhandev Global Group ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கற்றாழை ஏற்றுமதி செய்து வரும் ஹரிஷ் ஒரு கோடீஸ்வரராக மாறியுள்ளார். இவருடைய வருடாந்திர வருமானம் 2 முதல் 3 கோடி வரை. இப்ப சொல்லுங்க இவர் அரசு வேலையை விட்டது சரியா..? தவறா..?