சென்னை: தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், நேர்முக உதவியாளர், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர் என மொத்தம் 2,540 பணியிடங்களுக்கான குரூப் 2, 2 ஏ வின் முதன்மை தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற தகவலை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழக அரசில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி உரிய அறிவிப்பினை வெளியிட்டு நிரப்பி வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 வரை என தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் பணியிடங்களை நிரப்பி வருகிறது.
அந்த வகையில் தான், தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், ஊழல் தடுப்பு உள்பட 507 இடங்களுக்கும், குரூப் 2 ஏ-வில் நேர்முக உதவியாளர், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர் என 48 துறைகளில் காலியாக உள்ள 1820 பணியிடங்களும் என மொத்தம் 2,540 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியானது.
குரூப் 2, 2 ஏ முதல்நிலை தேர்வுகள் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து இதற்கான முடிவுகள் கடந்த 13 ஆம் தேதி, அதாவது தேர்வு நடந்து 57 வேலை நாட்களுக்குள் வெளியிடப்பட்டது. குரூப்-2, 2ஏ முதல் நிலை தேர்வு முடிவில் 29,809 தேர்வர்கள் தேர்ச்சி பெற்று இருப்பது தேர்வு முடிவு புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிய வந்தது.
குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தக் கட்டமாக முதன்மை தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இந்த நிலையில், குரூப் 2, 2ஏ வின் முதன்மை தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற தகவலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
குரூப் 2, 2 ஏ தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 29 ஆயிரத்து 809 தேர்வர்கள் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். குருப் 2 மற்றும் குருப் 2ஏ முதன்மைத் தேர்வின் தமிழ் மொழி தகுதித்தேர்வு (தாள்-1) பிப்ரவரி 8 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
குரூப் 2ஏ பதவிகளுக்கான பொது அறிவு மற்றும் மொழித்தாள் தேர்வு (தாள்-2), கொள்குறி வகையில் எழுத்து தேர்வாக பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். குருப் 2 பதவிகளுக்கான பொது அறிவு தேர்வு (தாள்-2) பிப்ரவரி 23 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.