சென்னை: ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் தேர்வுகளைப் பல லட்சம் பேர் எழுதி வருகின்றனர். இதற்கிடையே தேர்வர்களின் நலன் கருதி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. என்ன மாற்றங்கள்.. இது குறித்து டிஎன்பிஎஸ்சி பகிர்ந்துள்ள விவரங்கள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பணிகள் எப்போதும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமே நிரப்பப்படுகிறது. எப்படியாவது அரசுப் பணியில் சேர வேண்டும் என நினைப்பவர்கள் இதற்குத் தயாராவார்கள்.
குரூப் தேர்வுகள்: ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் எத்தனை இடங்கள் காலியாக இருக்கிறது என்பது கணக்கிடப்பட்டு, தேர்வு மூலம் அவை நிரப்பப்படும். டிஎன்பிஎஸ்சியை பொறுத்து குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்படும். இதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் இளைஞர்கள் இதற்காகவே தயாராகி வருகிறார்கள்.
குரூப் 1 உள்ளிட்ட சில தேர்வுகளுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும். மற்ற காலியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலமாகவே நிரப்பப்படும். இதற்கிடையே அதிகபட்ச இளைஞர்கள் எழுதும் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளின் பாடத் திட்டத்தில் டிஎன்பிஎஸ்சி முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
மாற்றம்: குரூப் 2 ம்றும் 2ஏ பணிகளுக்கான முதல் நிலை பொதுத் தேர்வில் பொது தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், மொழி பாடத்திட்டத்தில் மொழி பெயர்ப்பு, எழுதும் திறன், கலைச்சொற்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. அதேநேரம் இலக்கியத்திற்கான பாடத்திட்டத்தில் கேள்விகள் குறைக்கப்பட்டுள்ளன.
குரூப் 4 தேர்வுகளைப் பொறுத்தவரைத் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீடு தேர்வுக்கான பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி குரூப் 4 தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் ஆங்கில மொழித்தாளை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு: இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், "தேர்வர்களின் நலன் கருதியும், அரசுத்துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 2 (தொகுதி 2 மற்றும் 2A பணிகள்)க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 (தொகுதி4 பணிகள்)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டு https://tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/English/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.