இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் பெரும் வர்த்தக தடுமாற்றத்திற்கு பின்பு கடந்த ஒரு மாதமாக பெறப்பட்ட புதிய வர்த்தகங்கள் மூலம் பெருமூச்சு விட்டு வருகிறது, ஆனாலும் இன்னும் ஐடி சேவை துறையில் புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை உருவாக்கம் குறைவாகவே உள்ளது.
இதற்கு மத்தியில் இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு இன்னும் சம்பள உயர்வை அளிக்கவில்லை, விப்ரோ மற்றும் இன்போசிஸ் ஊழியர்களுக்கான வேரியபிள் பே தொகையை 80 சதவீதம் மட்டுமே அளித்துள்ளது. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகமாக பார்க்கப்படும் வேளையில் Hexaware செய்ததை பார்க்கும் போது பலருக்கும் வியப்பாக உள்ளது.
ஆகஸ்ட் 29 ஆம் தேதி Hexaware டெக்னாலஜிஸ் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு 100 சதவீதம் வேரியபிள் பே தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளது. இன்போசிஸ், விப்ரோ ஆகியவை 80 சதவீதம் வரையிலான வேரியபிள் பே தொகையை மட்டுமே கொடுத்துள்ள நிலையில், Hexaware அறிவித்துள்ள 100 சதவீத வேரியபிள் பே ஐடி ஊழியர்கள் மத்தியில் வியப்பாக உள்ளது.
Hexaware நிறுவனத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு 100 சதவீத வேரியபிள் பே தொகையும், எதிர்பார்ப்பை காட்டிலும் அதிகமாக செயல்திறன் காட்டிய ஊழியர்களுக்கு 120 சதவீதம் வேரியபிள் பே தொகை அளிப்பதாக தெரிவித்துள்ளது. ஊழியர்கள் மீதான இந்த முதலீடு நீண்ட கால அடிப்படையில் பலன் அளிக்கும் என நம்புகிறது ஹெக்சாவேர்.
ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது, அவர்களுடைய செயல்திறன், கிரியேட்டிவிட்டி, கொலாபிரேஷன் ஆகியவை அதிகரிக்கும் என இந்நிறுவன அறிக்கையில் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான பிராண்ட் பைனான்ஸ் அறிக்கையின் படி 2023 ஆம் ஆண்டில் இந்திய ஐடி துறையில் வேகமாக வளர்ந்து வரும் பிராண்டாக உயர்ந்துள்ளது.
இதன் வாயிலாக Hexaware நிறுவனத்தின் ரேட்டிங்-ம் AA தரத்திற்கு உயர்ந்துள்ளது, கடந்த 3 வருடத்தில் பிராண்ட் மதிப்பீடு சுமார் 66 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. சர்வதேச பொருளாதார பாதிப்பால் ஐடி துறை வர்த்தகம் பாதிக்கப்பட்ட இந்த சூழ்நிலையிலும் Hexaware நிறுவனம் 6000 ஊழியர்களை பணியில் சேர்க்க உள்ளது.
மேலும் Hexaware நிறுவனத்தில் ஊழியர்கள் தக்க வைக்கும் அளவீடு 2021 ஆம் ஆண்டில் இருந்த 68 சதவீதத்தில் இருந்து 2022 ஆம் ஆண்டில் 73 சதவீதமாக உயர்ந்துள்ளது.