சென்னை: தமிழ்நாடு முழுக்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு இலவசமாகச் சத்துணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுக்க 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அதை நிரப்ப இப்போது சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம் 1982ஆம் ஆண்டு முதல் சத்துணவுத் திட்டமாக மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய சத்துணவுத் திட்டத்தை அடுத்தடுத்து வந்த அரசுகளும் தொடர்ந்து வருகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறப்புப் பயிற்சி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்குச் சூடான சமைத்த மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த சத்துணவுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திடச் சமையல் உதவியாளர்களை பணிக்கு எடுக்க சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுக்க 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அந்த பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.3,000 என்ற தொகுப்பூதியத்தில் இந்த காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் நியமனம் செய்யப்படுவோர் 12 மாதங்கள் திருப்திகரமாக பணியாற்றினால் பணியை முடிக்கும் தகுதியானவர்களுக்குச் சிறப்பு காலமுறை ஊதியமும் தனியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் சிறப்புக் கால முறை ஊதிய (STS) நிலை -1 (ரூ.3000-9000)) வழங்கப்படும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10வது தேர்ச்சி/தோல்வி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதற்காக இணை இயக்குநர் நியமன அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.27 கோடி செலவு கூடுதலாக ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு அமல்படுத்தும் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாகச் சத்துணவுத் திட்டம் பார்க்கப்படுகிறது. மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளிகளில் மாணவர் வருகையைத் தக்கவைப்பது, குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவது ஆகியவை இதன் நோக்கமாகும். பசி அல்லது நோய் இருந்தால் எந்தவொரு குழந்தையாலும் முறையாக ஒருமுகப்படுத்திப் படிப்பில் கவனம் செலுத்த முடியாது என்பதற்காகவே மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த குழந்தைகளுக்குச் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்வதே சத்துணவுத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் கல்வி மாணவ, மாணவியர் இடைநிறுத்தம் தடுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்தவே சமையல் உதவியாளர்களைத் தமிழக அரசுப் பணிக்கு எடுக்கிறது. முதலில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வந்த இந்தத் திட்டம் பிறகு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சில காலம் செயல்படுத்தப்பட்டது. கடந்த 2006 முதல் சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது.