நாடு முழுவதும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் உள்ள கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான ( Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster ) அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம், 12,828 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எவ்வித எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் இல்லாமல், 10ம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வானவர்கள் பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
குறைந்தபட்ச வயது - 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)
அதிகபட்ச வயது - 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)
பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்), பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்) , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (3 ஆண்டுகள்), மாற்றுத் திறனாளிகள்(10 ஆண்டுகள்) நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.
கல்வி தகுதி: குறைந்தபட்ச பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். 10ம் வகுப்பில் விண்ணப்பித்தில் குறிப்பிட இருக்கும் உள்ளூர் மொழியை 10ம் வகுப்பில் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்.
காலியிடங்கள்:
நாடு முழுவதும் : 12,828
இதில், தமிழ் நாட்டில் உள்ள கிளை அஞ்சல் அலுவலகங்களில் 18 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கோயம்பத்தூர், தருமபுரி, திண்டுக்கல், சேலம் கிழக்கு, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மண்டலங்களில் தலா 2 இடங்களும், தாம்பரம் மண்டலத்தில் 3 இடங்களும், விருத்தாச்சலம் மண்டலத்தில் 4 இடங்களும் நிரப்பப்பட உள்ளது.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தைத் தாண்டி, நாட்டின் எந்தவொரு அஞ்சல் வட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும்.
ஊதியம் மற்றும் படிகள்:
தற்போது, புதிதாக முறைப்படுத்தப்பட்ட காலம் தொடரும் படிகள் அமைப்பு மற்றும் ஊதிய அளவுகள் கடைபிடிக்கப்படும் (Time Related Continuity allowance (TRCA) structure and slabs).
வரிசை | பதவி | ஊதிய விவரம் |
1 | கிளை போஸ்ட் மாஸ்டர் | Rs. 12000/- |
2 | உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர் | Rs. 10000/- |
தேர்வு செய்யப்படும் முறை: நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் (அதாவது 10ம் வகுப்பு) பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் வருமானம் ஈட்டி வருவதற்கான விண்ணப்பத்தை Rule 3-A (iii) of GDS (Conduct and Engagement) Rules, 2020-ன் படி சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in என்ற முகவரியின் கீழ் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே, ஜனவரி மாதத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக இரண்டாம் பாகத்தில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் (சாதி சான்றிதழ், கல்வித் தகுதி, மின்னஞ்சல், புகைப்படம், கையெழுத்து, தொலைபேசி எண்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக் கட்டணம்: பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏனைய வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
அஞ்சல் வங்கிக் கிளையின் மூலமாகவோ அல்லது ரூபே/விசா/ மாஸ்டர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்.
பின்னணி: அஞ்சல்துறையின் துறை சாராத சேவை அமைப்பு 150 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. கிராமப்பகுதிகளில் முறையான முழு நேர ஊழியர்களுக்கு அவசியம் இல்லாத நிலையில் அடிப்படை, சிக்கன அஞ்சல் சேவை வழங்க இந்த அமைப்பு தேவைப்பட்டது. 1,29,346 துறை சாராத கிளை அஞ்சல் அலுவலகங்கள் இந்த கிராம அஞ்சல் பணியாளர்கள், கிளை போஸ்ட் மாஸ்டர்கள் ஆகியோரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.