கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) ஜூனியர் ஓவர்மேன்(பயிற்சி), மைனிங் ஷிர்தார் (mining sirdar) ஆகிய காலி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனமான என்எல்சியில் வேலை செய்ய ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்எல்சி என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மத்திய அரசு நிறுவனமான என்எல்சியில் ஏராளமான காலிபணியிடங்கள் ஒவ்வொரு வருடமும் அறிவிக்கப்பட்டு நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு இந்தியா முழுவதுமே பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகிறார்கள்.
கடலூர் மாவட்டமான நெய்வேலியில் இந்த பணியிடங்களுக்கு தமிழ்நாட்டு இளைஞர்களும் அண்மைக்காலமாக அதிக அளவில் விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த சூழலில் புதிதாக அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் குறித்து என்எல்சி நிறுவனம் இன்று விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில் நெய்வேலியில் ஜூனியர் ஓவர்மேன்(பயிற்சி) பணியில் 61 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இதேபோல் 102 மைனிங் ஷிர்தார் (mining sirdar) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ஜூனியர் ஓவர்மேன்(பயிற்சி) பணிக்கு ரூ.31000-110000 (S1 கிரேடு) சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மைனிங் ஷிர்தார் பணிக்கு ரூ.26000-110000 சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான முழு அறிவிப்பு https://www.nlcindia.in/new_website/ இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. முழு அறிவிப்பு வந்த உடன் அதில் பார்க்கலாம். கல்வி தகுதி, வயது தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் பார்க்க முடியும். அதன்படி விண்ணப்பிக்கலாம்.
இதனிடையே என்எல்சியில் கிராஜுவேட் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி (GET) காலியிடங்களை (167 பணியிடங்கள்) நிரப்புவதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகி 6 நாட்கள் ஆகிறது. கடந்த டிசம்பர் 16ம் தேதி தொடங்கி ஜனவரி 15ம் தேதி வரை இந்த பணியிடங்களுக்கு தகுதி உள்ள பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியும். மெக்கானிக்கல் (84), எலக்ட்ரிக்கல் (44), சிவில் (25), கண்ட்ரோல் அண்டு இன்ஸ்டுமென்டேசன் (10), ஆகிய பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதியும் வயது தகுதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.