தேய்க்க தேய்க்க பணம்... திகட்டத் திகட்ட செலவுகள்... கிரெடிட் கார்டு வரமா, சாபமா?

post-img

கடந்த 2022-23-ம் நிதி ஆண்டில் கிரெடிட் கார்டுகள் மூலம் செலவு செய்யப்பட்ட தொகையைப் பார்த்தால், பகீரென்று இருக்கிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2022-23-ம் நிதி ஆண்டில் இந்தியா முழுக்க கிரெடிட் கார்டு களின் மூலம் ஏறக்குறைய ரூ.14.3 லட்சம் கோடி அளவுக்கு மக்கள் செலவு செய்திருக்கிறார்கள் என்கிற செய்தி உண்மையிலேயே அதிர்ச்சி அடையச் செய்யும் தகவல் ஆகும்.

ரூ.6 லட்சம் கோடியிலிருந்து...

காரணம், இது முந்தைய நிதி ஆண்டைக் (2021-22) காட்டிலும் 47.27% அதிகம். 2021-22-ம் நிதி ஆண்டில் கிரெடிட் கார்டு மூலம் மக்கள் செலவு செய்த மொத்தத் தொகை ரூ.9.71 லட்சம் கோடி மட்டுமே. 2018-19-ம் நிதி ஆண்டில் கிரெடிட் கார்டுகள் மூலம் செலவு செய்யப்பட்ட தொகை ரூ.6.03 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது.

கிரெடிட் கார்டுகள் மூலமான செலவு, கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் ரூ.1.05 லட்சம் கோடி என்று ஒரு உச்சம் தொட்டது. ஆனால், 2023 மார்ச் மாதத்தில் அதையும் விஞ்சி, ரூ.1.37 லட்சம் கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் கோடி என்ற அளவைத் தாண்டி தான் கிரெடிட் கார்டுகள் மூலமான செலவுகள் இருப்பது அதிர வைக்கும் தகவலாகவே இருக்கின்றன.

 

அதிகரித்த கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கை...

கிரெடிட் கார்டு மூலமாக செலவு ஒரு பக்கம் அதிகரித்துவரும் அதே நிலையில், கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. வங்கிகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2023 மார்ச் மாதத்தில் மட்டும் புதிதாக 19.3 லட்சம் புதிய கிரெடிட் கார்டுகள் விற்பனை செய்யப் பட்டுள்ளன. வழக்கமாக, ஒரு மாதத்தில் 12 லட்சம் முதல் 15 லட்சம் வரையில்தான் கிரெடிட் கார்டுகள் விற்பனை இருக்கும். ஆனால், மார்ச் மாதத்தில் அதிக அளவில் (19.3 லட்சம்) கிரெடிட் கார்டு விற்பனை ஆகியிருக்கிறது.

கடந்த நிதி ஆண்டில் மொத்தம் 1.16 கோடி கிரெடிட் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. நம் நாட்டில் பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருக் கின்றனர். இதனால் கடந்த மார்ச் 2023 நிலவரப்படி, இந்தியாவில் சுமார் 8.53 கோடி கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.

Related Post