”தானாக விடியும்னு தவறாக நம்பாதே” திருமாவளவன் வரிகள்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன இந்த விஷயத்தை கவனிச்சீங்களா

post-img

சென்னை: விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் நீண்ட நெடிய விளக்க பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவின் இறுதியில் திருமாவளவனின் வரிகளை ஆதவ் அர்ஜுனா மேற்கோள் காட்டியிருக்கிறார். தானாக விடியுமென்று தவறாக நம்பாதே.. வீணாக மனம் நொந்து எல்லாம் விதியென்று வெம்பாதே எனப்பதிவிட்டு இருக்கிறார்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது. ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "மன்னர் பரம்பரையை உருவாக்க தமிழகம் இனி ஒருபோதும் இடம் தராது. மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. 2026- தேர்தலுக்கான பணிகள் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும்.
பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை.. அம்பேத்கர் உருவாக்கியதை போல, இங்கு பிறப்பால் ஒரு முதல்வர் உருவாக்கப்படக் கூடாது. தமிழகத்தை ஆள வேண்டும் என்றால் ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆள வேண்டும்" என்று பேசினார். விசிகவின் துணை பொதுச்செயலாளராக இருந்து கொண்டே ஆதவ் அர்ஜுனா இவ்வாறு பேசியது அக்கட்சியின் தலைமைக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறிய திருமாவளவன் கட்சியின் உயர் மட்டக்குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார். இந்த நிலையில்தான் விசிகவில் இருந்து ஆறு மாத காலத்திற்கு ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திருமாவளவன் அதிரடியாக அறிவித்தார். ஆதவ் அர்ஜுனாவை நீக்கிய கையோடு தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசினார்.
பெஞ்சல் பாதிப்பு தொடர்பான நிவாரண நிதி அளிக்க சென்ற திருமாவளவன் முதல்வரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ஆதவ் அர்ஜுனா விவகாரம் தொடர்பாக பேசியிருக்கலாம் என்று கூட சொல்லப்படுகிறது. விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்வதாக திருமாவளவன் அறிவித்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவிடம் இருந்து உடனடியாக எந்த ரியாக்‌ஷனும் வரவில்லை. ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றுள்ளதாகவும் தமிழகம் திரும்பிய பிறகே இது தொடர்பாக ரியாக்ட் செய்வார் என்று கூட வலைத்தளங்களில் பேச்சு எழுந்தது.
ஆனால் இன்று மாலை 6.30 மணியளவில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா, தனது சஸ்பெண்ட் தொடர்பாக கருத்து தெரிவித்தார். ஆதவ் அர்ஜுனா கூறுகையில், "கட்சி தலைமையின் நடவடிக்கயை காலத்தின் கைகளில் ஒப்படைக்கிறேன். அம்பேத்கர், பெரியார், அண்ணா வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை' என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன் உள்ளிட்ட கருத்துக்களை கூறி மிக நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். குறிப்பாக கடைசியாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனிக்க வைத்துள்ளது. திருமாவளவன் வரிகளை மேற்கோள் காட்டி ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
"தானாக விடியுமென்று
தவறாக நம்பாதே
வீணாக மனம் நொந்து
எல்லாம் விதியென்று
வெம்பாதே!
நீயாக முன்வந்து
நெருப்பாக விழி சிவந்து
நிலையாக போரிட்டால்
நிச்சயமாய் விடியலுண்டு
உனக்கு" என்று பதிவிட்டுள்ளார்.

Related Post