திருப்பூர்: தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. தற்போதைய புதுஅறிவிப்பின்படி தமிழில் எழுதபடிக்க தெரிந்தாலே மாதம் குறைந்தபட்சம் ரூ.11,600 முதல் அதிகபட்சமாக ரூ.58,600 வரையிலான சம்பளத்தில் பணி வாய்ப்பு காத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஏராளமான கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் அமைந்துள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி வழக்கு எழுத்தர் பணிக்கு ஒருவர், சீட்டு விற்பனை எழுத்தர் பணிக்கு 2 பேர், தட்டச்சர் பணிக்கு ஒருவர், காவலர் பணிக்கு 4 பேர், உதவி மின்பணியாளர், தோட்டக்காரர், கூர்க்கா பணிக்கு தலா ஒருவர், திருவலகு பணிக்கு 2 பேர், என மொத்தம் 13 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இதில் வழக்கு எழுத்தர், சீட்டு விற்பனை எழுத்தர் பணிக்கு 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்விதகுதி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் பணிக்கு 10ம்வகுப்பு அல்லது அதற்கு நிகரான கல்வி தகுதி பெற்றிருப்பதோடு தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காவலர், தோட்டக்காரர், திருவலகு, கூர்க்கா பணிக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருந்தால் மட்டுமே போதுமானது. உதவி மின்பணியாளர் பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்கம்பிப்பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவன சான்று, மின்உரிமம் வழங்கல் வாரியத்தில் எச் சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் வழக்கு எழுத்தர், சீட்டு விற்பனை எழுத்தர், தட்டச்சர் பணிக்கு மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை சம்பளம் வழங்கப்படும். உதவி மின்பணியாளர் பணிக்கு மாதம் ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை சம்பளம் வழங்கப்படும். காவலர், திருவலகு, கூர்க்கா பணிக்கு மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை சம்பளம் வழங்கப்படும். தோட்டக்காரர் பணிக்கு மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை சம்பளம் வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://sivanmalaimurugan.hrce.tn.gov.in இணையதளம் சென்று விண்ணப்ப படிவம் பதிவிறக்க பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் நேரடியாக அல்லது தபால் முறையில் மே மாதம் 17 ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்பங்களை ‛‛உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், சிவன்மலை -638701, காங்கேயம் வட்டம், திருப்பூர் மாவட்டம்'' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளனர்.