சென்னை: மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி என்ஜினீயர் I மற்றம் ப்ராஜெக்ட் என்ஜினீயர் I பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL or Bharat Electronics Limited) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல இடங்களில் இயங்கி வருகிறது.
இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்பட மொத்தம் 250க்கும் அதிகமான பொருட்களை இந்த பெல் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது. இந்நிலையில் தான் மத்திய பிரதேச மாநிலம் கோத்வாராவில் உள்ள பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி என்ஜினீயர் I (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 5 பேர், டிரெய்னி என்ஜினீயர் I (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பணிக்கு 3 பேர், ப்ராஜெக்ட் என்ஜினீயர் I (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 7 பேர், ப்ராஜெக்ட் என்ஜினீயர் I (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பணிக்கு 7 பேர் என மொத்தம் 22 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்வி தகுதி: டிரெய்னி என்ஜினீயர் I, ப்ராஜெக்ட் என்ஜினீயர் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு பிஇ, பிடெக் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் டெலிக்யூனிகேஷன், கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளை முடித்திருக்க வேண்டும். அதேபோல் டிரெய்னி என்ஜினீயர் I (கம்ப்யூட்டர் சயின்ஸ்), ப்ராகெ்ட் என்ஜினீயர் I (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக்கில் கம்ப்யூட்ட்ர சயின்ஸ் என்ஜினீயர் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: டிரெய்னி என்ஜினீயர் I பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். ப்ராஜெக்ட் என்ஜினீயர் I பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்படும்.
மாதசம்பளம்: இந்த பணி என்பது தற்காலிகமானது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் 3 ஆண்டு வரை பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு தகுதியானவர்கள் மட்டும் ப்ரொஜெக்ட் என்ஜினீயர் II பணிக்கு நியமனம் செய்ப்படுவார்கள். டிரெய்னி என்ஜினீயர் I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் ஆண்டு ரூ.30 ஆயிரம், 2வது ஆண்டு ரூ.35 ஆயிரம், 3வது ஆண்டு ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். ப்ராஜெக்ட் என்ஜினீயர் I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் ஆண்டு ரூ.40 ஆயிரம், 2வது ஆண்டு ரூ.45 ஆயிரம், 3வது ஆண்டு ரூ.55 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://bel-india.in/ என்ற இணையதளம் மூலம் பிப்ரவரி மாதம் 12ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ப்ராஜெக்ட் என்ஜினீயர் I பணிக்கு கட்டணமாக ரூ.472 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிரெய்னி என்ஜினீயர் I பணிக்கு கட்டணமாக ரூ.177 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது இல்லை. விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.