நியூட்ரிஷன் மற்றும் சைக்காலஜி படிப்புகளில் கவனம் செலுத்தும் மாணவர்கள் திருநெல்வேலியில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுரியில் நியூட்ரிஷன் மற்றும் சைக்காலஜி படிப்புகளுக்கு அட்மிசன் குவிந்து வருகிறது. இந்த படிப்பின் முக்கியத்துவம் அதிகரித்ததற்கான காரணம் மற்றும் இதன் வேலை வாய்ப்புகள் குறித்து அக்கல்லுரியின் முதல்வர் முனைவர் சே.மு.அப்துல்காதர் நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
நியூட்ரிஷன்படிப்புக்கு 12ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை கட்டாய பாடங்களாக படித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இளங்கலை பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும். அதேபோல் உணவு மற்றும் ஊட்டச்சத்து, சுகாதார கல்வி போன்ற தொடர்புடைய படிப்புகளில் சான்றிதழ் அல்லது டிப்ளமோ படிப்புகளை படித்தவர்களும் இத்துறை இளங்கலை பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இது முழு நேரம் படிக்கக்கூடிய மூன்று வருட பட்டப்படிப்பு ஆகும். இந்த படிப்பு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை அறிவியல் துறையில் அதிக கவனம் செலுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் எடுத்துக் கொள்ளவேண்டிய சரியான உணவு, உணவு மேலாண்மை, சீரான உணவின் கூறுகள், உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மேலாண்மை போன்ற பல தலைப்புகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
இத்துறை முதுகலைப் பட்டதாரிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை, சுகாதாரத்துறை, என்.ஜி.ஓக்கள்,அரசாங்கத் துறை மற்றும் நிறுவனங்கள், கல்வித் துறை நிறுவனங்கள் போன்றவற்றில் பணி அமர்த்தப்படுகிறார்கள். இவை மட்டுமல்லாது இத்துறை பட்டதாரிகள் தனியாக க்ளினிக்குகளைத் துவங்கி சிறப்பாக சேவை செய்ய முடியும்.
இதேபோல் பி.எஸ்சி. உளவியல் பாடத்திட்டத்தில் சமூக உளவியல், ஆளுமை உளவியல், மேம்பாட்டு உளவியல் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப்படுகிறது. மருத்துவ உளவியல், சமூக உளவியல், தொழில் நிறுவன உளவியல், தடயவியல் உளவியல் என பல்வேறு பிரிவு பாடங்களைக் கொண்டுள்ளது. பி.எஸ்சி. உளவியல் முடித்துவிட்டு மேற்படிப்புகளான எம்.எஸ்சி, உளவியல், எம்.ஏ. உளவியல், எம்.பி.ஏ. மனிதவள மேம்பாடு, மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க் உள்ளிட்டவை எடுத்து படிப்பதன் மூலம் ஸ்திரமான தொழில் வாய்ப்பு பெற இயலும்.
சுயமாக ஆலோசனை மையம் வைத்து, மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு அளிப்பதன் மூலம் வருவாய் ஈட்டலாம். குழந்தைகள் கல்வி சார்ந்த ஆலோசனை, தொழில் ரீதியாக மனஅழுத்தம் கொண்டவர்கள் பிரச்சினைக்கு தீர்வு, சிறைக்கூடங்களில் கைதிகளுக்கு மன ரீதியான ஆலோசனை, கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனை, அரசு துறைகள் என பலதரப்பட்ட துறைகளிலும் இவர்களுக்கான வேலை வாய்ப்பு காத்திருக்கிறது என முதல்வர் முனைவர் சே.மு.அப்துல்காதர் தெரிவித்தார்.