பதவியை பறித்த நீதிபதிக்கு இந்திரா காந்தி தந்த தண்டனை இதுதான்.. லோக்சபாவில் காங்கிரஸை விளாசிய மோடி

post-img
டெல்லி: அரசியல் சாசனம் குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பதலளித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சி கடந்த 75 ஆண்டுகளில் 50 முறை அரசியல் சாசனத்தை மாற்றி உள்ளது எனக்கூறிய பிரதமர் மோடி, நேரு விதைத்த விஷ விதைக்கு இந்திரா காந்தி தண்ணீர் ஊற்றி வளர்த்தார். அவரது பதவியை பறித்ததால் எமர்ஜென்சி கொண்டு வந்ததோடு, தீர்ப்பு வழங்கிய நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அனுமதி வழங்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக விளாசினார். நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்றும், இன்றும் அரசியல் சாசனம் குறித்து விவாதம் நடந்தது. ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 26 ம் தேதி அரசியலமைப்பு சாசன நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது நம் நாட்டின் அரசியலமைப்பு அமலுக்கு வந்து 75 ஆண்டு ஆனதை பெருமைப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் இன்று அரசியலமைப்பு தின சிறப்பு விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று இந்த விவாதத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.அதன்பிறகு எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிஎம்பிக்கள் உரையாற்றினர். பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி, ஆ ராசா உள்பட பல தலைவர்கள் உரையாற்றினர். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதையடுத்து இன்று அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் லோக்சபாவில் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி இன்று மாலையில் பதிலுரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து விளாசினார். நேரு, இந்திரா காந்தியை குறிப்பிட்டு சரமாரியாக விளாசினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது: 1947 முதல் 1952 வரை தேர்வு செய்யப்பட்ட அரசு இல்லை. இடைக்கால அமைப்பாக அமைச்சரவை பதவியேற்று இருந்தது. தேர்தல்கள் நடக்கவில்லை. 1952க்கு முன்பு ராஜ்யசபா உருவாக்கப்படவில்லை. அப்போது தேர்வு செய்யப்பட்ட அரசாக இல்லாவிட்டால் அரசியலமைப்பை மாற்றம் செய்வதற்கு முயன்றனர். இதுஅரசியலமைப்பு சட்டத்தை எழுதிய மேதைகளை அவமதிக்கும் செயலாகும். அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கு, அவசர சட்டத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது. நேரம் கிடைத்தபோதெல்லாம் அரசியல் சட்டத்தை காங்கிரஸ் கட்சி வேட்டையாடியது. 70 ஆண்டுகளில் 60 முறை அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தார்கள். நேரு விதைத்த விஷ விதைக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்தவர் இன்னொரு பிரதமர் இந்திரா காந்தி. 1976ல் உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பையே மாற்றியவர் இந்திரா காந்தி. நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்து இந்திரா காந்தியின் பதவியை பறித்தபோது இந்திரா காந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்தார். தனது பதவி பறிப்பதற்கு காரணமானவர்களை எமர்ஜென்சி மூலமாக பழி வாங்கினார். நீதிமன்றம் இந்திரா காந்தியின் எம்பி பதவியை பறித்தால் கோபத்தில் எமர்ஜென்சியை கொண்டு வந்தார். தனது நாற்காலியை காப்பாற்றவே எமர்ஜென்சியை கொண்டு வந்தவர் இந்திரா காந்தி. காங்கிரஸ் கட்சியின் ஒரு குடும்பம் ஜனநாயகம், அரசியல் சாசனத்தை குலைப்பதற்கான எந்த முயற்சிகளையும் விட்டு வைக்கவில்லை. நாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள். ஒரெயாரு காங்கிரஸ் கட்சி தான் அரசியலமைப்பு சாசனத்தை பலமுறை காயப்படுத்தியது. தனது வெற்றி வெற்றி செல்லாது என அறிவித்த நீதிபதி கண்ணாவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வர இந்திரா காந்தி அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போது அரசியல் சாசனத்தை காரணம் காட்டி சிலர் தங்களது தோல்வியை மறைக்க நினைக்கின்றனர்’’ என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

Related Post