கொல்கத்தா: நம் நாட்டு இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று இன்போசிஸ் நாராயண மூர்த்தி கூறியதற்கு கடுமையான விமர்சனங்கள் வந்தது. இருந்த போதும் தனது கருத்தில் இருந்து நாராயண மூர்த்தி பின் வாங்காமல், மாறாக தனது கருத்தை நியாயப்படுத்தும் விதமாக அதற்கு விளக்கம் அளித்து அவர் மீண்டும் பேசியுள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயண மூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, தொழிலாளர்களின் பணி நேரம் குறித்த பேச்சு விமர்சனத்திற்கு உள்ளானது. நாராயண மூத்தி கூறுகையில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் வேலை உற்பத்தித் திறன் குறைவாக உள்ளது. பிற நாடுகளுடன் போட்டி போட நாம் தயாராக இருக்க வேண்டும்.
நம் நாட்டு இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். நாராயணமூர்த்தியின் இந்த பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின. 70 மணி நேரம் வேலை செய்தால் குடும்பத்தினருடன் சுத்தமாக நேரத்தைச் செலவிட முடியாது என்றும், இயந்திரத்தனமான வாழ்க்கையாக மாறிவிடும் எனவும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.
அதேநேரத்தில் நாராயண மூர்த்தியின் கருத்து முதலாளித்துவ பார்வையில் இருப்பதாகவும் ஊழியர்களை பற்றி அவர் எதுவும் சிந்திக்கவில்லை என்றும் காட்டமாக கூறினர். கடுமையான விமர்சனங்கள் வந்த போதும் தனது கருத்தில் இருந்து நாராயண மூர்த்தி பின் வாங்கவில்லை. மாறாக தனது கருத்தை நியாயப்படுத்தும் விதமாக நாராயணமூர்த்தி பேசி வருகிறார்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய வர்த்தக சபையின் நூற்றாண்டு விழா தொடக்க விழாவில் இன்போசிஸ் நாராயண மூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவை நம்பர் 1 ஆக உருவாக்குவதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்பதை இளைஞர்கள் உணரவேண்டும். உலகின் முன்னணி நிறுவனங்களுடன் நமது நிறுவனத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று நான் இன்போஸ்சில் சொல்வேன்.
உலகின் தலைசிறந்த நிறுவனங்களுடன் நம்மை ஒப்பிடும் போது, இந்தியர்களாகிய நாம் நிறைய பணியாற்ற வேண்டும். நமது இலக்கை மிக உயர்வாக வைக்க வேண்டும். ஏனெனில், 800 மில்லியன் மக்கள் இலவசமாக ரேஷன் பெறுகிறார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால் 80 கோடி பேர் வறுமையில் உள்ளார்கள். நாம் கடினமாக உழைக்க தயாராகவில்லை என்றால், பிறகு யார் செய்வார்கள்.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே வறுமைக்கு எதிரான ஒரே தீர்வாகும். 70 களில் பாரிஸில் வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தியா எவ்வளவு ஊழல் நிறைந்தது, அசுத்தமானது என மேற்கு நாடுகள் பேசின. எனது நாட்டில் (இந்தியா) வறுமை நிலவியது. சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தன. மேற்கு நாடுகளில் அனைவரும் கணிசமான அளவு வளர்ச்சி பெற்றார்கள். ரயில்கள் சரியான நேரத்தில் இயங்கின.
இது தவறாக இருக்க முடியாது என நினைத்தேன். பிரான்சின் கம்யூனிச தலைவரை நான் சந்தித்தேன். எனது அனைத்து கேள்விக்கும் பதிலளித்தார். ஆனால், எனக்கு திருப்தி ஏற்படவில்லை. வறுமையை ஒழிக்க வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமே ஒரே வழி என நான் உணர்ந்தேன். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதால், தொழில் அதிபர்களும் தேசத்தை கட்டமைக்கிறார்கள் என உணர்ந்து கொண்டேன். முதலீட்டாளர்களுக்கு செல்வத்தை உருவாக்குவதோடு வரியும் செலுத்துகிறார்கள்" என்றார்.
சிறப்பாக செயல்பட்டால்தான் அங்கீகாரம் கிடைக்கும். அங்கீகாரம்தான் மரியாதை கொடுக்கும். மரியாதை அதிகாரத்தை தரும். நமது முன்னோர்களின் கனவை நிறைவேற்ற இளைஞர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அதனால்தான் நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். இந்தியர்களை விட சீனா தொழிலாளர்கள் 3.5 மடங்கு ஆக்கப்பூர்வமானவர்கள் என இங்கு ஒருவர் சொன்னார்.
முட்டாள்தனமான கருத்துக்களை எழுதிவிட்டு பரிதாபகரமான நிலையிலும் உலகத்தால் ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருப்பது எளிது. இங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் நான் சொல்வது என்னவென்றால், உங்களின் மதிப்புகளை உணர்ந்து கொள்ள வாழ்க்கையை அர்ப்பணித்து செயல்வேடவேண்டும் என்பதே" என்றார்.