திமுகவின் கூட்டணி மைனஸ் ஆகிவிடும்.. ”விஜய் வாயில் சர்க்கரை போடுவேன்”.. நடிகை கஸ்தூரி பரபரப்பு பேச்சு

post-img

திருச்சி: திமுகவின் 200+ என்ற கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என்று விஜய் பேசியது நடந்தால் அவர் வாய்க்கு சக்கரை கொடுப்பேன் என்றும், இதற்காகவே விஜய்க்கு ஆதரவு அளிக்கலாம் என்று நடிகை கஸ்தூரி கூறினார். மேலும், திமுகவை வெளியேற்ற நாம் தமிழர் கட்சியின் சீமான் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, விஜய் சொல்லியது போல் திமுக கூட்டணி மைனஸ் ஆகியது என்றால் அவர் வாய்க்கு சக்கரை கொடுப்பேன் என்றும், உதயநிதி ஸ்டாலின் தரக்குறைவாக பேசுவது ஒன்றும் புதிது கிடையாது என்றும் கூறினார். நடிகை கஸ்தூரி கூறியதாவது:-

சமீபத்தில் வந்த வெள்ளத்தில் ரூ. 4000 கோடி பைப் லைன் போட்டதாக கூறினார்கள். இப்போது மழை பெய்தபோது சென்னையில் வெள்ளம் தேங்கவில்லை. அடுத்த நாளே வெள்ளம் வடிந்துவிட்டது என்று கூறினார்கள். ரூ.4000 கோடிக்கு போட்ட பைல் லைன் காரணமாக வெள்ளநீர் வடியவில்லை. தெருவுக்கு தெரு கொண்டு வந்து வைத்த மோட்டார் பம்புகளினால் தான் வெள்ளநீர் வடிந்தது. இதற்கு எதற்கு ரூ.4000 கோடி செலவு செய்ய வேண்டும். கூடுதலாக இன்னும் கொஞ்சம் மோட்டார் பம்புகளை வாங்கி வைத்துவிட வேண்டியது தானே..
இது எல்லாமே சாதாரண மக்களுக்கும் தெரிகின்றது. நான் இருக்கின்ற ஏரியாவில் நான் மட்டுமா இருக்கிறேன். ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருக்குமே இது தெரியுது. அவங்க எல்லாரும் திமுக மீது வெறுப்பில் தான் இருக்கிறார்கள். அதை மீறி திமுக ஜெயிக்க வேண்டும் என்றால், எல்லாரும் தனித்தனியாக இருப்பதனால் ஜெயிப்பார்கள். இதற்காக தான் விஜய்யை சீண்டி விடுவது, அண்ணாமலை, இபிஎஸை உசுப்பேத்தி விடுவது போன்ற வேலைகளை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
சீமான் சொல்லிவிட்டார் நான் தனியாக தான் நிற்பேன் என்று. நான் ஜெயிலில் இருந்தபோது முதலில் எனக்கு ஆறுதல் சொல்லியது சீமான் தான். நான் வெளியே வந்ததும் அவருக்கு நன்றி சொன்னேன். அந்த நன்றியோட வெளிப்பாடாக அவருக்கு ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன். என்னை திட்டினாலும் பரவாயில்லை. எல்லாரும் சேர்ந்து மக்களோட ஒரே ஆசை திமுகவை வெளியேற்றுவது அதை செய்துவிட்டு அப்புறம் அவங்க அவங்க கொள்கையை பாருங்கள் என்று சொல்லிக்கொள்கிறேன்.

தொடர்ந்து பேசிய கஸ்தூரி, திமுக கூட்டணி மைனஸ் ஆகும் என்று விஜய் பேசியது நடந்தால் அவர் வாயில் சர்க்கைரை போடுவேன் என்று கூறினார். கஸ்தூரி கூறுகையில், ”இது எல்லாம் நடந்தால் கண்டிப்பாக விஜய் வாயில் நான் சர்க்கரை போடுகிறேன். இதற்கே விஜய்க்கு நான் ஆதரவு கொடுக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சினிமா செய்திகள் பார்ப்பது இல்லை என்று கூறியதற்கு பதில் அளித்த கஸ்தூரி கூறியதாவது, ”சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என்று உதயநிதி கூறும்போது அவர் ரெட் ஜெயண்ட் பற்றி தான் சொல்கிறார் என்று நான் நினைத்துக்கொண்டேன். உதயநிதி தரைக்குறைவாக பேசுவது ஒன்றும் புதுசு கிடையாது. இன்றைக்கு விஜய்யை சொல்லியிருக்கிறார். ஆதவ் அர்ஜுனாவை சொல்லியிருக்கிறார். முன்பு ரஜினியை சொன்னார். அதற்கு பிறகு சனாதனத்தை சொல்லியிருக்கிறார்” என்று கூறினார்.
முன்னதாக அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், கூட்டணிகள் இருக்கும் இறுமாப்புடன் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற எகத்தாளமிடும் அரசுக்கு மக்களோடு இணைந்து நான் ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். நீங்கள் போடும் கணக்கை எல்லாம் 2026 சட்டசபை தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்று கூறியிருந்தார். இதற்கு பதில் கூறிய உதயநிதி ஸ்டாலின், சினிமா செய்திகள் பார்ப்பதில்லை என்று பதில் அளித்து இருந்தார்.

Related Post