பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் வால்வோ கார் மீது டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வால்வோ கார் அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 6 பேரும் உடல் நசுங்கி பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரின் நீலமங்கலா பகுதியில் இன்று கோர விபத்து ஏற்பட்டுள்ளது. வால்வோ சொகுசு கார் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் காரில் பயணம் செய்த 6 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர். இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
பெங்களூர் புறநகர் பகுதியான தலேகேர பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 48-ல் இன்று காலை டிரக் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிரக்கை ஒட்டி பக்கவாட்டில் வால்வோ கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரில் 6 பேர் பயணித்துள்ளனர். கண்டெய்னர் லாரியும் டிரக்கும் ஒரே சீராக சென்று கொண்டிருந்த நிலையில் தீடிரென்று டிரக் பக்கவாட்டில் சரிந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் வால்வோ கார் மீது கண்டெய்னர் விழுந்தது. பல டன் எடை கொண்ட கண்டெய்னர் சரிந்தத்தில் கார் அப்பளம் போல நசுங்கியது. விபத்தை பார்த்த சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியை முடுக்கிவிட்டனர்.
கண்டெய்னருக்கு அடியில் இருந்த காரை மீட்க முடியாத நிலை இருந்ததால் கிரேன் உதவியுடன் கண்டெய்னரை மீட்புக் குழுவினர் தூக்கினர். அதன்பிறகு சேதம் அடைந்த காரை பார்த்த போது, காரில் பயணம் செய்த 6 பேரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காரில் சென்றவர்கள் விஜயபுரா நோக்கி சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தைகள் உள்பட 6 பேர் பலி:
இரண்டு பெண்கள், இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் காரில் சென்றுள்ளனர். டிரக்கின் முன்னால் திடீரென்று இரண்டு கார்கள் வந்ததால் விபத்தை தவிர்க்க டிரைவர், டிரக்கை வலது பக்கமாக திருப்பியதாகவும் இதில் கட்டுப்பாட்டை இழந்த டிரக் கவிழ்ந்து கார் மீது விழுந்து இந்த கோர விபத்து நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த விபத்து காரணமாக பெங்களூர்- தும்கூர் சாலையில் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து செயல்பட்டு போகுவரத்தை சீர் செய்தனர். விபத்தில் கார் உருக்குலைந்து கிடக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. வார விடுமுறை காரணமாக இன்று காலையில் இருந்தே தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது.
#Breaking near #Bengaluru!
Six persons including two children were killed when a container truck toppled and fell on their #Volvo car near #Nelamangala on NH48. The victims were on their way to Vijayapura for vacation when the #accident took place. pic.twitter.com/WEsztv0JOB
விபத்தில் சிக்கிய காரின் அடையாளம் தெரிந்தது:
இதற்கிடையில் காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தால், சில மணி நேரத்திற்கு போக்குவரத்து நெரிசைல் காணப்பட்டது. விபத்தில் சிக்கிய காரின் பதிவெண் விவரம் வெளியாகியுள்ளது. KA-01-ND-1536- என்ற பதிவெண் கொண்ட காரில் தொழிலதிபர் ஒரு தனது குடும்பத்துடன் சென்ற போது விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, " உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக நான் இறைவனிடம் வேண்டுகிறேன். அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.