சென்னை: விசிகவுக்கு திமுக கூட்டணியில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 25 சீட்டுகள் கேட்போம் என வன்னி அரசு தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் பலம் பற்றிய பின்னணியை கொஞ்சம் விரிவாக அலசி பார்ப்போம்.
விசிக தலைவர் திருமாவளவன் 1999க்கு முன்பு வரை தேர்தல் பாதை திருடர்களின் பாதை என்ற முழக்கத்தையே முன்வைத்து வந்தார். மூப்பனாருடன் கூட்டணி அமைத்து முதன்முதலாக 1999ல் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது விசிக. அதில், திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் தோல்வியை தழுவினார். இதுதான் அவர் கண்ட முதல் தேர்தல் களம்.
அடுத்து கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு 64627 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அதே தொகுதியில் விசிக சார்பில் 2006இல் கே. செல்வம் போட்டியிட்ட போது 62217 வாக்குகளைப் பெற்றார். முதல்முறையாக இந்தத் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்ட போது அவர் திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.
மங்களூர் தொகுதியில் திமுக 1967 முதலே அதிக முறை வெற்றிபெற்றுள்ளது. பின்னர் அதிமுகவும் சில முறை வெற்றிபெற்றுள்ளது. இங்கே நேரடியாக விசிக சார்பில் போட்டியிட்ட முதல் வேட்பாளர் கே.செல்வம்தான். அந்த முடிவை 2001இல் திருமாவளவனே எடுக்க முடியாத அளவிற்குத்தான் அவரது கட்சியின் செல்வாக்கு இருந்தது.
அவர் சட்டமன்றத்திலிருந்து 2009இல் நாடாளுமன்றத்திற்கு மாறி சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அதன்பின் தொடர்ந்து 2019, 2024 என சிதம்பரம் தொகுதி எம்பியாக பதவியை தக்கவைத்து வருகிறார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பலமான கூட்டணியிலிருந்தபோது திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பெற்ற மொத்த வாக்குகள் 5,05,084. ஆனால், இந்தக் கூட்டணியுடன் ஒப்பிடும்போது அதிமுக பலமான அணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவில்லை. அப்படி இருந்தும் திருமாவளவனை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 4,01,530 வாக்குகளைப் பெற்றது ஆச்சரியம்தான்.
பாஜக கூட்டணி இங்கே 1,68,493 வாக்குகளைப் பெற்றது. அந்த வாக்குகள் அதிமுக கூட்டணிக்குச் சென்றிருந்தால் நிச்சயம் அங்கே அதிமுக வென்றிருக்கும் நிலையைப் பார்க்கமுடிகிறது. இன்னும் சொல்லப் போனால் இங்கே நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 65,589 வாக்குகளைப் பெற்றுள்ளார். திமுக பலமான அணியாக கருதப்பட்ட 2024 தேர்தலில் கூட திருமாவளவனால் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடிந்துள்ளது.
இப்போதைக்கு விசிக கையில் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அப்படிப் பார்த்தால் 12 சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தை இந்தக் கட்சி பெற்றுள்ளது. தனித்து நின்றால் இந்தப் பலம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். கூட்டணி பலத்தால் 2 எம்பி தொகுதிகளைப் பெற்றுள்ளது விசிக. அதேபோல் பல இடங்களில் விசிக பலத்தால் திமுக வென்றுள்ளது. அதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
கடந்த 2021இல் விசிகவுக்கு 6 தொகுதிகளை திமுக ஒதுக்கி இருந்தது. அதாவது செய்யூர், திருப்போரூர், அரக்கோணம், வானூர், காட்டுமன்னார்கோவில், நாகை ஆகியவை அதில் அடங்கும். இதில் காட்டுமன்னார்கோவில், செய்யூர், திருப்போரூர், நாகை ஆகிய இடங்களில் மட்டுமே இந்தக் கட்சியால் வெல்ல முடிந்தது. திமுக கூட்டணியில் இடம்பெற்றதால்தான் விசிக உறுப்பினர்கள் சட்டசபைக்குள் 10 ஆண்டுகள் கழித்து உள்ளே செல்லக்கூடிய வாய்ப்பை பெற்றனர்.
அரக்கோணம் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்ட கவுதம சன்னா தோல்வியடைந்தார். அங்கே அதிமுக வென்றது. இன்றைக்கு 25 சீட்டுகளை திமுக கூட்டணியில் கேட்போம் என்ற கருத்து முன்வைத்துள்ள வன்னி அரசு, கடந்த 201இல் வானூர் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் சக்ரபாணியிடம் தோல்வியைத் தழுவினார். வன்னி அரசு அங்கே பெற்ற மொத்த வாக்குகள் 70,492 தான். அதிமுக 92,219 வாக்குகளைப் பெற்றது. இந்தத் தொகுதியை கடந்த 2001இல் இருந்து அதிமுக தன் கையில் வைத்திருக்கிறது. அதை திமுக கூட்டணியால் உடைக்கவே முடியவில்லை.
இந்நிலையில் தான் வன்னி அரசு வரும் தேர்தலில் 25 சீட்டு கேட்போம் என்கிறார். இரண்டு எம்பிக்கள் எனப் பார்த்தால்கூட 12 சீட்டுகள்தான் வருகின்றன. 25 சீட்டு என்றால் குறைந்தது 4 எம்பிகள் தேவை. கடந்த 2024 மக்களவையில் திமுக 3 எம்பி சீட்டு கொடுக்கவே தயங்கியது. ஒரு பொதுத் தொகுதிக்கு பல வாரங்கள் பேச்சு வார்த்தை நடந்தது.
அதை அறிந்தும் வன்னி அரசு 25 சீட்டுகளைக் கேட்டுள்ளார். அதைப் பற்றிப் பேசிய திருமாவளவன் அது அவரது சொந்தக் கருத்து என விளக்கம் அளித்திருக்கிறார். எத்தனை தொகுதிகள் என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம் என சொல்வதுதான் அரசியல் கட்சிகள் வழக்கமாகக் கடைப்பிடித்து வரும் நடைமுறை. அதனை மீறி பொதுவெளியில் ஒரு கருத்தை முன்வைக்கமாட்டார்கள். அதுவும் கசப்பான ஒரு கருத்தைக் கூறமாட்டார்கள். அதை அறிந்தவர் வன்னி அரசு. அவரே ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் தலைமையை மீறி அவர் தனித்துப் பேசக் கூடாது என்று சொன்னவர். இப்போது அவர் கூட்டணியில் எத்தனை சீட்டு என்பதைக் கேட்கும் அளவுக்குப் போய் இருக்கிறார். இது கூட்டணியில் மீண்டும் ஒரு சலசலப்பை உண்டாக்கும் என்பதை அறியாதவர் அல்ல அவர். தெரிந்துதான் அதை முன்வைக்கிறார்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.