திருப்பூர்: திருப்பூர் அருகே அவிநாசியில் நடைபயிற்சிக்கு சென்றவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக அந்த நபரின் மனைவியும் கள்ளக்காதலனும் கூலிப்படையினருடன் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த காசிகவுண்டன்புதூர் தாமரை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன் ரமேஷ் (45). இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்தார்.
ஊட்டியை பூர்வீகமாக கொண்ட ரமேஷ், வீட்டில் இருந்தபடியே கார் கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், ரமேஷ் கடந்த 1ஆம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது கோவை - சேலம் ஆறுவழிச் சாலை, மங்கலம் சாலை பைபாஸ் அருகே சர்வீஸ் சாலையில் காரில் வந்த மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக ரமேஷை வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இந்த கொடூரதத் தாக்குதலில் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் ரத்த வெள்ளத்தில் துடித்து உதவிக்காக போராடினார்.
அப்போது அந்த பகுதியாக வந்தவர்கள் போலீஸுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ரமேஷை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ரமேஷ் உயிரிழந்தார்.
வாக்கிங் சென்றவர் வெட்டி கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் யார் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து அவிநாசி போலீஸார், 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
செங்கப்பள்ளி, கணியூர் டோல்கேட் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் தனிப்படையினர் ஆய்வு செய்தனர். அதில் கொலையாளிகள் காரில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் பேரில் கூலிப்படையினர் திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் கோபால கிருஷ்ணன் (35), மன்னார்குடி அஜித் (27), சிம்பு (23), சரண் (24), தேனி மாவட்டம் சில்லுவார்பட்டி ஜெயப்பிரகாஷ் (45) ஆகிய 5 பேரை கடந்த 4 ஆம் தேதி கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரமேஷ் மனைவிக்கு இந்த கொலையில் பங்குண்டு என தெரியவந்தது. அதன் பேரில் விசாரணை நடத்தியது. கொலையான ரமேஷ் மனைவி விஜயலட்சுமிக்கும் அவினாசி காசிக்கவுண்டன்புதூரை சேர்ந்த சையது இர்பான் (28) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இவர்கள் இருவரும் வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (27) மூலம் கூலிப்படையினரை ஏவி ரமேஷ் கொலை செய்ததாக நேற்றைய தினம் கைது செய்தனர்.
இந்த நிலையில் விஜயலட்சுமியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் ரமேஷின் வீடு இருக்கும் பகுதிக்கு அருகே சையது இர்பான், சிப்ஸ் கடை நடத்தி வந்தார். விஜயலட்சுமியுடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டதாம். அதே வேளையில் கணவர் ரமேஷுக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலும் ரமேஷ் மதுபானம் குடித்துவிட்டு வந்து விஜயலட்சுமியை செக்ஸ் டார்ச்சர் செய்து அடித்து துன்புறுத்தி வந்தாராம். இதை விஜயலட்சுமி தனது கள்ளக்காதலன் இர்பானிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து கணவரை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என அவரிடம் தெரிவித்தாராம். இதையடுத்துத்தான் கூலிப்படையினரை விட்டு கொலை செய்தனராம்.
Weather Data Source: Wettervorhersage 21 tage