டெல்லி: ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் வந்ததைக் குறிப்பதாகச் சொல்லி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மத்திய பாஜக அரசு செங்கோல் ஒன்றை நிறுவி இருந்தது. இன்றைய தினம் ராஜ்யசபாவில் இந்த செங்கோல் தொடர்பாகவே காரசார விவாதம் நடந்தது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று ராஜ்யசபாவில் அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெற்றது.
பூபேந்தர் யாதவ்: அப்போது "இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டு புகழ்பெற்ற பயணம்" என்ற தலைப்பில் ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையில் செங்கோல் குறித்து சில கருத்துகளைக் குறிப்பிட்டவே அதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது பூபேந்தர் யாதவ் ராஜ்யசபாவில், "சுதந்திரத்தின் போது அதிகார பரிமாற்றத்தின் அடையாளமாகச் செங்கோல் வழங்கப்பட்டது. ஆனால், அது நீதியின் சின்னமாக இல்லாமல் ஜவஹர்லால் நேருவின் ஊன்றுகோலாக கருதப்பட்டது" என்று குறிப்பிட்டார்.
இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், "செங்கோலை யாரும் யாருக்கும் வழங்கப்படவில்லை" என்று குறிப்பிட்டார். அப்போது பூபேந்தர் யாதவ், "கடந்த 75 ஆண்டுகளாக இந்த செங்கோல் எங்கு வைக்கப்பட்டது என்பது குறித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒருமுறை கூட பேசவில்லை" என்றார்.
இது வரலாறு இல்லை: உடனே எழுந்து பேசிய ஜெய்ராம் ரமேஷ், "இது வரலாறு இல்லை.. ஆளும் கட்சி திட்டமிட்டு உண்மைக்கு மாறான தகவலை ஆளும் தரப்பு பரப்பி வருகிறது. இது முறைப்படி யாரிடமும் வழங்கப்படவில்லை.. ஒரு கொண்டாட்டத்தின் போது யாரோ சிலர் செங்கோலைக் கொடுத்தனர். அதை வைத்தே ஒரு கதையை உருவாக்கிவிட்டனர்" என்றார்.
நட்டா: உடனே ஜே.பி. நட்டா எழுந்து, "நாடு சுதந்திரம் அடைந்த போது இந்தியாவில் அதிகார பரிமாற்றம் நடக்கும் போது பின்பற்றப்படும் பாரம்பரியம் குறித்து மவுண்ட்பேட்டன் பிரபு நேருவிடம் கேட்டார். ஆனால் அப்படியொரு பாரம்பரியமோ அல்லது சடங்கோ எதுவும் இருப்பது போலத் தெரியவில்லை என்று நேரு கூறியிருக்கிறார். அதன் பிறகு ராஜாஜியே சோழ சாம்ராஜ்யத்தில் செங்கோல் மூலம் அதிகார பரிமாற்றம் நடந்து இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டார்.
அதே சோழ வம்சத்தினர்தான் நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவும் விழாவில் கலந்து கொண்டனர். அந்த செங்கோல் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டது. 1947 ஆகஸ்ட் 14ம் தேதி அந்த செங்கோல் நேருவிடம் அவரது இல்லத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டது" என்றார். நட்டா இப்படிச் சொன்னதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தால் அங்குச் சலசலப்பு ஏற்பட்டது.
எதிர்த்தனர்: தொடர்ந்து பேசிய பூபேந்தர் யாதவ், "காங்கிரஸ் தலைவர்களில் சிலர் அரசியலமைப்பை மதிக்கவில்லை.. அவர்கள் அரசியலமைப்பின் நகலை தங்கள் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சுற்றித் திரிகிறார்கள். நாட்டின் முன்னேற்றத்துடன் தொடர்புடைய விவகாரங்களில் பாஜக ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்காது. தேசமே முதன்மையானது என்பதே எங்கள் கொள்கை. ஆனால், காங்கிரஸைப் பாருங்கள். ஜிஎஸ்டி மற்றும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் என அனைத்தையும் எதிர்த்ததே வருகிறார்கள்.
எங்கள் கட்சியின் நிறுவனர் (பாரதிய ஜனசங்கத்தை நிறுவிய), சியாமா பிரசாத் முகர்ஜி, ஜம்மு- காஷ்மீருக்காகத் தனது உயிரையே தியாகம் செய்தவர்.. மோடி அரசு தான் செங்கோலைக் கூட நாடாளுமன்றத்தில் நிறுவியது. இது மட்டுமா.. ராமர் இல்லை எனக் கூறி ராமர் சேது வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்ததே காங்கிரஸ் தான். அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயம் ராமரின் படத்தைத் தான் கொண்டுள்ளது. அப்படியிருக்கும் போது காங்கிரஸ் அவரைப் புறக்கணித்து பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்தது.
பாஜக அரசு தொடர்பாக அவர்கள் பொய்களைப் பரப்ப முயன்ற போதெல்லாம், பொது மக்கள் அவர்களுக்குத் தேர்தல்களில் மிகப் பெரிய தோல்வியையே பரிசாகக் கொடுத்தனர். ஜனநாயகத்தின் மூன்று தூண்களான சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் மீது முந்தைய காங்கிரஸ் அரசு மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி இருக்கிறது" என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.
அப்போது பேசிய திமுக எம்பி வில்சன், "கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டத்தை ஒவ்வொரு செங்கல்லாகச் சிதைக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது முதல் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பது வரை அனைத்தையுமே செய்துள்ளது. மத்திய அரசு அரசியலமைப்பைத் துண்டு துண்டாகச் சிதைத்துவிட்டது.
17வது லோக்சபாவில் மொத்தம் 221க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மூன்றில் ஒரு பங்கு மசோதாக்கள் குறித்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே விவாதம் நடந்தது. மணிப்பூர் இனப்படுகொலை குறித்து விவாதமே இல்லை.. நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் எல்லாம் பெயருக்கு மட்டுமே இருக்கிறது" என்று மிகக் கடுமையாக விமர்சித்தார்.