தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அடுத்த தலைவர் யார்? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

post-img

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதனால் காங்கிரஸ் கமிட்டியில் அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2019-ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டார். கே.எஸ்.அழகிரி தலைமையில்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை தமிழக காங்கிரஸ் கட்சி சந்தித்தது.

கட்சியின் விதிமுறைகளின்படி இவரது பதவிக்காலம் 2022-ம் ஆண்டு பிப்ரவரியுடன் நிறைவடைந்துவிட்டது. புதிய தலைவரைத் தேர்வுசெய்வதற்கான பணியில் காங்கிரஸ் தலைமை தீவிரம் காட்டியது. இதனால் தலைவர் பதவியை பிடிக்க காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வபெருந்தகை, கரூர் எம்.பி ஜோதிமணி, செல்லக்குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர். அந்த நேரத்தில் டெல்லி தலைமையில் ஏற்பட்ட குழப்பம், பிறகு அகில இந்திய தலைவருக்கான தேர்தல், கர்நாடக மாநிலத் தேர்தல் ஆகியவற்றின் மீது காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தியதால், தமிழக மாநில தலைவர் விவகாரம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மாநில தலைவரான கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்று மூத்த தலைவர்கள் பலர் தொடர்ந்து தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். இந்நிலையில் கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு புதிய தலைவர் நியமன அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, செல்லக்குமார், சசிகாந்த் செந்தில் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநில தேர்தலில் சிறந்த பங்களிப்பை வழங்கியதாக கருதப்படும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், தமிழக பாஜகவை எதிர்ப்பதற்கான சிறந்த தேர்வாக இருக்கும் என்றும் சிலர் கருதுகின்றனர். ஒருவேளை செல்வப்பெருந்தகை தலைவராக நியமிக்கப்பட்டால், சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி வருகிறது.

 

Related Post