ஜெய்ப்பூர்: நீதித்துறையில் ஊழல் உள்ளதாக விமர்சித்து சர்ச்சையை கிளப்பிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இந்நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி அசோக் கெலாட் பேசியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது அன்றைய தினம் பத்திரிகையாளர்களை அசோக் கெலாட் சந்தித்தார். அப்போது அவர் நீதித்துறையை விமர்சனம் செய்தது தான் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது.
அதாவது ‛‛நீதித்துறையில் இன்று ஊழல் தலைவிரித்தாடுகிறது. சில வழக்கறிஞர்கள் தாங்களாகவே தீர்ப்பை எழுதி வழங்குவதாக கேள்விபட்டேன்'' என்றார். அசோக் கெலாட்டின் இந்த கருத்து என்பது நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையை சீர்க்குலைக்கும் வகையில் இருந்தது. இதனால் அவரது கருத்தை பலரும் கண்டித்தனர்.
அதோடு அசோக் கெலாட்டுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி தூக்கினர். மேலும் அசோக் கெலாட்டுக்கு எதிராக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அசோக் கெலாட் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தனது கருத்து குறித்து அசோக் கெலாட் நீதிமன்றத்துக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தான் அசோக் கெலாட் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் நீதித்துறை குறித்த தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், ‛‛எனது கருத்து புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உள்நோக்கத்துடன் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. நீதித்துறையை நான் எப்போதும் மதித்து வருகிறேன். அதோடு நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது'' என்பன போன்ற விபரங்கள் அடங்கி உள்ளன.
Weather Data Source: Wettervorhersage 21 tage