புஷ்பா 2 இருக்கட்டும்.. திடீரென அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்! என்ன காரணம் தெரியுமா?

post-img

ஹைதராபாத்: புஷ்பா 2 திரைப்படம் இன்று உலகெங்கும் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பு மிகச் சிறப்பாக இருப்பதாகப் பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்தச் சூழலில் திடீரென ஹைதராபாத் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். திடீரென அவர் மீது வழக்குப்பதிவு செய்ய என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
தெலுங்கில் செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து புஷ்பா என்ற திரைப்படம் கடந்த 2021ம் ஆண்டு வெளியானது. அந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், புஷ்பா 2 தி ரூல் படம் தயாரானது.
அல்லு அர்ஜுன் , ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. இந்தப் படம் இன்று உலகெங்கும் வெளியானது. உலகெங்கும் சுமார் 12,000 திரையரங்குகளில் புஷ்பா 2 திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனது.
சிறப்புக் காட்சிகள்: படம் இன்று தான் ரிலீஸ் என்ற போதிலும் நேற்றிரவு தெலுங்கானாவில் பல சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. சிறப்புக் காட்சிகளில் கட்டணம் ரூ. 1000ஆக வசூலிக்கப்பட்டது. இருப்பினும், கட்டணத்தைப் பொருட்படுத்தாமல் பலரும் ஆர்வமாகப் படத்தைக் காணக் குவிந்தனர். அதன்படி தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 திரைப்படத்தின் திரையிடப்பட்டது.
இதற்காக நேற்று இரவு முதலே அதிகளவில் சந்தியா திரையரங்கில் கூடினர். இதற்கிடையே நேற்றிரவு திடீரென நடிகர் அல்லு அர்ஜூன் சந்தியா தியேட்டருக்கு சென்றுள்ளார். திடீரென அவர் வந்ததால் அவரை பார்க்க ரசிகர்கள் முந்தியடித்துள்ளனர். அப்போது குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என பலரும் நெரிசலில் சிக்கினர். எதிர்பாராதவிதமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், போலீசார் லேசான தடியடியும் நடத்தினர்.
உயிரிழப்பு: இதில் பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அந்த பெண்ணின் மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புஷ்பா படத்தைப் பார்க்கச் சென்ற குடும்பத்துடன் சென்றவர்களுக்கு இப்படி நேர்ந்தது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
என்ன நடந்தது: மேலும், கூட்டத்தை நிர்வகிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய சந்தியா தியேட்டர் நிர்வாகத்தின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அல்லு அர்ஜுன் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் திடீரென தியேட்டருக்கு வந்ததே திடீரென அங்கு நெரிசல் ஏற்படக் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து அல்லு அர்ஜுன் அல்லது தியேட்டர் நிர்வாகம் எந்தவொரு விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.
வழக்குப்பதிவு: இது தொடர்பாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வரப் போவது குறித்து தியேட்டர் நிர்வாகம் அல்லது சம்பந்தப்பட்ட நடிகர் யாரும் எங்களுக்குத் தகவல் தரவில்லை.. அதேநேரம் தியேட்டர் நிர்வாகத்திற்கு அவர் வர போவது முன்கூட்டியே தெரியும். அப்படித் தெரிந்தும் அவர்கள் வந்து செல்ல தனிப் பாதை அமைக்கப்படவில்லை. இதுவே விபத்துக்குக் காரணம்" என்று கூறப்பட்டுள்ளது.

Related Post