சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டார். உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சேர்க்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி கடந்த புதன்கிழமை பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில் பாலாஜியை சந்தித்த பிறகு, செந்தில் பாலாஜியை வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து நேற்று இரவே செந்தில் பாலாஜி ஓமந்தூராரில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு விரைவாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என ஓமந்தூரார் மருத்துவமனை டாக்டர்கள் குழுவும், இ எஸ் ஐ மருத்துவர்கள் குழுவும் பரிந்துரைத்திருந்தது. காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை எப்போது மேற்கொள்ளப்படும் என்ற விவரங்களை தெரிவித்தார். மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- நேற்று இரவு அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற அனுமதிப்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவில் இருந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செந்தில் பாலாஜிக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருக்கிறது என்பதால் மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்க தொடங்கியிருக்கிறார்கள். ரத்த நாளங்களில் இருந்த அடைப்புகள் இருந்ததால் பிளட் தின்னர் சிகிச்சையை ஓமந்தூராரில் செய்து இருக்கிறார்கள். எனவே, இந்த சிகிச்சையை மூன்று, நான்கு நாட்களுக்கு நிறுத்தினால்தான் சில மருத்துவ சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்.
அது முடிந்த பிறகே ஆபரேஷன் செய்ய முடியும். அந்த வகையில் இன்று காலை சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் நாங்கள் பேசினோம். பிளட் தின்னர் சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது, நான்கு, ஐந்து நாட்கள் கழித்து அவருடைய ரத்தப் போக்கு சம்பந்தமான விஷயங்களை ஆராய்ந்து விட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். ஒமந்துராராரில் தான் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் தான் செந்தில் பாலாஜிக்கு இருந்தது.
ஆனால், அவரது துணைவியார் காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். யாருக்கு என்ன விருப்பமோ அந்த சுய விருப்பத்தை தான் நிறைவேற்ற வேண்டும். அதுதான் மனித நியதி, அதனால் நாங்கள் நன்றாக சிகிச்சை அளிக்கிறோம். இங்கேயே சேருங்கள் என்று சொல்வது தப்பாகிவிடும். செந்தில் பாலாஜி மனைவி விரும்பியதால் காவேரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது" என்றார்.