மயிலாப்பூரில் 'மார்கழியில் மக்களிசை'! தேதியை அறிவித்தது பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம்

post-img
சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கடந்த 4 ஆண்டுகளாக 'மார்கழியில் மக்களிசை' எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. 5வது ஆண்டாக இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி நடக்கும் தேதியை தற்போது பண்பாட்டு மையம் அறிவித்திருக்கிறது. மேடை மறுக்கப்பட்ட இசைக்கலைஞர்களை மேடை ஏற்றுவதை நோக்கமாக கொண்டு மார்கழியில் மக்களிசை நடத்தப்பட்டு வருவதாக நீலம் பண்பாட்டு மையம் கூறியிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் நடந்த இந்த இசை நிகழ்ச்சிகளில் பிரபல இசையமைப்பாளர்களான யுவன்சங்கர் ராஜா, ஜீ.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். அந்த வகையில் இந்த ஆண்டும் இசை நிகழச்சியை பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி நிரல், சிறப்பு அழைப்பாளர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. தற்போது முதற்கட்டமாக நிகழ்ச்சி நடக்கும் தேதி, இடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, இந்த ஆண்டு சென்னை மயிலாப்பூர் குயில் தோப்பு பகுதியில் உள்ள சாந்தோம் பள்ளியில் டிச.27, 28, 29 ஆகிய தேதிகளில் மாலை 3 மணி தொடங்கி இரவு 9 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் நிகழ்ச்சிக்கு நன்கொடையும் வரவேற்கப்படுவதாக நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் பேரறிவாளன் பங்கேற்றிருந்தார். இது மிகுந்த கவனம் பெற்றிருந்தது. அவரது தாய் அற்புதம்மாளும், அவரும் சேர்ந்து பார்க்கும் முதல் இசை நிகழ்ச்சியாக இது இருந்தது. நிகழ்ச்சிகளை பொறுத்த அளவில் முதல் நாள் நாட்டுப்புற மற்றும் பழங்குடி மக்களின் இசை கச்சேரியும், இரண்டாம் நாள் கானா மற்றும் ராப் பாடல்களும், மூன்றாம் நாள் ஒப்பாரி, விடுதலை பாடல்களும் பாடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு பின்னால் பெரிய நோக்கங்கள் இருப்பதாக பா.ரஞ்சித் பலமுறை கூறியிருக்கிறார். "முதல் நோக்கம், நாட்டுப்புற கலைகளை அழிய விடாமல் பாதுகாப்பது. இன்றைய காலங்களில் பல நாட்டுப்புற கலைகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன. அந்த கலைக்காகவும், கலைஞர்களுக்காகவும் இந்த மேடையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இரண்டாவது நோக்கம் நாட்டுப்புற கலைஞர்களை அடையாளம் காண்பது" என்று ரஞ்சித் கூறியுள்ளார். அந்த வகையில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அரசியல் தலைவர்கள் பலரும் இந்த நிகழ்ச்சிக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Related Post