ஈரோடு: தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறையை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளர்களை சந்தித்து அவர் உரையாடிய போது இவ்வாறு தெரிவித்தார்.
ஈரோட்டிற்கு இரு நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள அவர், விசைத்தறி உரிமையாளர்களை சந்தித்தார். அப்போது மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிட்டு செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு முதல்வர் ஸ்டாலின், மாதந்தோறும் மின்சாரம் கணக்கீடு செய்யும் முறையை அமல்படுத்தவது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று களஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டப்பணிகள் தொடக்க விழாக்களிலும் பங்கேற்கிறார்.
அந்த வகையில் ஈரோட்டிற்கு இரண்டு நாள் பயணமாக நேற்று முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தார். அவருக்கு திமுக நிர்வாகிகளும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் இன்று காலை விமானம் மூலம் கோவை வந்த முதல்வர் ஸ்டாலின் சாலை மார்க்கமாக ஈரோடு வருகை தந்தார்.
அவருக்கு வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் விஜயமங்கலம் சுங்கச்சாவடி, பெருந்துறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது காரில் இருந்து இறங்கி வந்த முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஈரோடு மாவட்டம் நஞ்சனாபுரம் கிராமத்திற்கு சென்ற முதல்வர், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 2 கோடியாவது பயனாளியான சுந்தராம்பாளை சந்தித்து மருந்து பெட்டகத்தை வழங்கி நலம் விசாரித்தார். இதையடுத்து தொடர் சேவை சிகிச்சையில் உள்ள 60 வயது வசந்தா என்பவரையும் சந்தித்து அவரிடமும் நலம் விசாரித்தார்.
ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்துக் கொண்ட ஸ்டாலின் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார். அந்த விருந்தினர் மாளிகையிலேயே அவர் இரவு தங்கினார். பிறகு இன்று காலை 10 மணிக்கு ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்ற அவர் ரூ 951.20 கோடி மதிப்பீட்டில் வழங்கினார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் விசைத் தறி உரிமையாளர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையை அமல்படுத்தினால், எங்களுக்கு உதவியாக இருக்கும். இதனால் எங்களுக்கு மின்கட்டணம் செலுத்தும் சுமையானது குறையும் என கோரிக்கை விடுத்தனர்.
இதை கேட்ட முதல்வர், மாதந்தோறும் மின் கட்டணத்தை கணக்கெடுக்கும் முறையை அமல்படுத்த ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்தார். மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை வந்தால் மின் கட்டணம் பாதியாக குறையும். ஏற்கெனவே விலைவாசி உயர்வால் மக்கள் தவித்து வரும் நிலையில் இந்த வகையில் மின் கட்டணமாவது குறைய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூட மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தும் என சொல்லப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டம் எப்போது அமலாகும் என்ற கேள்வி எழுந்தது. இதை எதிர்க்கட்சிகளும் விமர்சித்தனர்.