சென்னை: வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி அஜித்தின் 'விடா முயற்சி’ வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், எந்தப் படங்கள் வெளியாகும் என்பது பற்றி தகவல் கிடைத்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் இந்த 2024 ஆம் ஆண்டு பல நல்ல படங்கள் வெளியாகியுள்ளன. அந்தப் பட்டியலில் 'லப்பர் பந்து', 'வாழை' , டிமான்ட்டி காலனி 2' 'மகாராஜா' என சில இடம்பிடித்துள்ளன. வெற்றிப் படங்களின் பட்டியலில் இல்லை என்றாலும் 'ஜமா' பலரது கவனத்தை ஈர்த்து இருந்தது.
இவை அனைத்தும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்களிலிருந்தாலும் இந்த ஆண்டில் அதிக வசூலை வாரிக் குவித்த படங்கள் என சொல்ல முடியாது. இந்த வருடம் அதிக வசூலைச் செய்த திரைப்படம் 'கோட்' என்றுதான் கோலிவுட் வட்டாரம் கணக்கு சொன்னது. சுமார் 450 கோடி என்றார்கள். இந்தப் படம் 'லியோ' வசூலைவிட அதிகம் என்றும் சொல்லப்பட்டது. படம் சுமாராக இருந்தாலும் விஜய் இனி அரசியலுக்குச் சென்றுவிட்டார். அடுத்து படங்களில் நடிக்க மாட்டார் என ஒரு டாக் அடிபடத் தொடங்கியதால், அவரது ரசிகர்கள் தியேட்டருக்குள் பெரிய வெள்ளமாக திரண்டு வந்துவிட்டனர்.
அதனால், விஜய் தனது 'லியோ’ சாதனையை அவரே முறியடித்துவிட்டார். பலர் யூடியூபில் உட்கார்ந்து கொண்டு எந்தக் கள நிலவரமும் தெரியாமல் அடித்துவிடுகிறார்கள். உண்மையான வசூல் என்பது திரையரங்க உரிமையாளர்களுக்குத் தான் தெரியும். அடுத்து தயாரிப்பாளர்கள். அந்த வகையில் திரையரங்க உரிமையாளர் திருச்சி ஸ்ரீதர் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களைப் பட்டியல் போட்டுள்ளார்.
அவரது கணக்குப் படி இந்த ஆண்டு பாக்ஸ் ஆபீஸ் வசூலை வாரிக் குவித்த திரைப்படம் அமரன் தான் என்கிறார். அடுத்து தான் விஜய்யின் 'கோட்' உள்ளது என்று சொல்லி இருக்கும் அவர், மூன்றாவது இடத்தை ரஜினியின் 'வேட்டையன்' பிடித்துள்ளது என்றும் ராயன், மற்றும் அரண்மனை ஆகிய இரண்டும் கிட்டத்தட்ட சரிசமமான வசூலை தொட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
'கோட்' படத்திற்கு இரண்டாவது இடமா? என மீண்டும் ஆச்சரியத்தோடு கேட்டால், இந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை எட்டிய படம் 'அமரன்' தான் என்கிறார் ஸ்ரீதர். விஜய்யின் 'கோட்' வசூல் சாதனையை அது முறியடித்துவிட்டது. 'இந்தியன் 2' படமே ஆவரேஜ் ஆன படம்தான். அதனால்தான் அது சரியாகப் போகவில்லை. 'கங்குவா'வை பொறுத்தவரை சூர்யா மீது ஏற்கெனவே ஒருசாரார் கோபத்திலிருந்தனர். அதனால் அதிக தாக்குதல் நடந்தன. ஜோதிகா அந்த நேரம் பார்த்து ஒரு கருத்தைச் சொல்லப் போய் அது எதிர்மறையாக மாறிவிட்டது. இந்தப் படம் என்னைப் பொறுத்தவரை சுமார்தான் என்றும் அவர் அடித்துச் சொல்லி இருக்கிறார்.
உலக அளவில் 'புஷ்பா 2’ திரைப்படம் சுமார் 800 கோடி வசூலைச் செய்துள்ளது. ஆனால். தமிழ்நாட்டில் அதன் வசூல் பெரிய அளவில் இல்லை என்று தெரிவித்துள்ளார் இவர். “உலக அளவில் 'புஷ்பா 2’ மிகப்பெரிய வசூலைச் செய்துள்ளது என்பது சரிதான். ஆனால், அனைவருக்கும் ஏமாற்றம் தரக்கூடிய செய்தி என்னவென்றால் தமிழ்நாட்டில் இந்தப் படம் சராசரியான வசூலைத்தான் பெற்றுள்ளது” என்றும் திருச்சி ஸ்ரீதர் பேசி இருக்கிறார்.
இந்த ஆண்டு வசூல் வேட்டையைச் செய்த படங்களைப் பற்றித் தெரிந்துகொண்டோம். வரும் பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன படங்கள் வெளியாக உள்ளன? பொங்கலுக்காவது அஜித்தின் 'விடா முயற்சி’வருமா? அதைப் பற்றி கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தபோது அஜித் படத்தை வெளியிடுவதில் லைகா உடன் ஏதோ ஒரு வர்த்தக ரீதியான சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கி நாளை வரை அஜித் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெறுகிறது. இந்த வேலைகள் முடிந்துவிட்டால், 'விடா முயற்சி’ ஜனவரி பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என்றும் தெரிகிறது.
அடுத்ததாக பாலாவின் 'வணங்கான்' , அடுத்து ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' ஆகியவை வெளிவர இருக்கின்றன. ஒருவேளை 'விடா முயற்சி' தள்ளிப் போனால் ஷங்கர் மற்றும் பாலாவின் படங்கள் நிச்சயம் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படங்களைப் பற்றி மக்கள் கருத்து எடுக்க முடியுமா? தயாரிப்பாளர் சங்கம் தடை போட்டுவிடுமா? என்பது பற்றிப் பேசிய ஸ்ரீதர், "நீதிமன்றத்தில் தடை கேட்டு மனுத் தாக்கல் செய்தார்கள். ஆனால், அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. குறிப்பிட்ட நடிகர் மீது தாக்குதல் தனிப்பட்ட வகையிலிருந்தால், காவல்துறையில் புகாரளிக்கச் சொல்லிவிட்டது. மக்கள் கருத்தை எடுப்பதற்கு தடை விதிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.