"மாஸ்கோ நோக்கி புறப்படுங்கள்.." ப்ரிகோஜின் மரணம்.. வாக்னர் குழு மிரட்டல்!

post-img

வாக்னர் குழு தலைவர் ப்ரிகோஜின் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், வாக்னர் படை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாக்னர் குழு தலைவராக இருந்தவர் ப்ரிகோஜின்... இவர் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகக் கடந்த ஜூன் மாதம் கலகம் செய்ய முயன்றனர். அது தோல்வியில் முடிந்த நிலையில், வாக்னர் படையில் இருந்த அனைத்து வீரர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் ப்ரிகோஜின் நேற்றைய தினம் விமான விபத்தில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.. ப்ரிகோஜின் மரணம் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் பரவி வருகிறது. புதின் தான் ப்ரிகோஜினை தீர்த்துக் கட்ட உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மரணம்: இதற்கிடையே ப்ரிகோஜின் மரணத்திற்குப் பழிவாங்கும் வகையில் வாக்னர் வீரர்கள் மாஸ்கோவை நோக்கி அணிவகுத்துச் செல்வதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.. ப்ரிகோஜின் சென்ற விமான மாஸ்கோவிற்கு வடமேற்கே உள்ள டேசர் பகுதியில் விழுந்து நொறுங்கியது... கலகம் செய்ய முயன்ற இரண்டாவது மாதத்தில் அவர் இப்படி உயிரிழந்துள்ளது பலருக்கும் பல வித சந்தேகங்களை எழுப்பியுள்ளது. விமான விபத்து தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

அதில் விமானம் செங்குத்தாகத் தரையை நோக்கிப் பாய்வதும் அதில் இருந்து புகை மற்றும் நெருப்பு வருவதும் தெளிவாகத் தெரிகிறது. ப்ரிகோஜின் மற்றும் துணைத் தலைவர் டிமிட்ரி உட்கின் உட்பட முக்கிய நபர்கள் இந்த விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே தனது தலைவரின் மரணத்திற்கு வாக்னர் குழுவும் பழிவாங்கும் எனக் கூறப்படுகிறது.

மிரட்டல்: இது குறித்து வாக்னர் குழு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வாக்னர் தலைவர் எவ்ஜெனி ப்ரிகோஜின் மரணம் குறித்து பல வதந்திகள் இருக்கிறது.. புதின் தலைமையிலான ரஷ்ய அதிகாரிகள் அவரைக் கொல்ல முயன்றதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.. ப்ரிகோஜினின் மரணம் பற்றிய தகவல்கள் உறுதி செய்யப்பட்டால், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவை நோக்கி நாங்கள் நிச்சயம் இரண்டாவது முறையாக முன்னேறுவோம்.. அவர் உயிருடன் இருப்பதே அனைவருக்கும் நல்லது" என்று கூறப்பட்டுள்ளது.

ப்ரிகோஜின் மரணம் குறித்து இப்போது பல்வேறு விதமான தகவல்கள் பரவி வருகிறது. ப்ரிகோஜின் சென்ற விமானத்தைச் சிலர் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சில ரஷ்யச் செய்தி நிறுவனங்களும் கூட ப்ரிகோஜின் விமானம் ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என கூறுகிறார்கள். இருப்பினும், ரஷ்யா தரப்பில் இருந்து இதுவரை யாரும் இதை உறுதி செய்யவில்லை.

என்ன நடந்திருக்கலாம்: ப்ரிகோஜின் மரணத்திற்கு என்ன நடந்திருக்கும் என்பது குறித்து இப்போது 3 விதமான தகவல்கள் பரவி வருகிறது. முதலில் புதின் உத்தரவின் பெயரில் ப்ரிகோஜின் கொலை செய்யப்பட்டிருக்கலாம். அல்லது ப்ரிகோஜின் மீது கோபத்தில் இருந்த வேறு சிலர் அவரை தீர்த்துக் கட்ட உத்தரவிட்டிருக்கலாம்.

குறிப்பாக ப்ரிகோஜின் சரமாரியாகக் குற்றஞ்சாட்டிய ரஷ்ய ராணுவத்தில் இருந்து யாராவது ஒருவர் ப்ரிகோஜினை கொலை செய்ய உத்தரவிட்டிருக்கலாம். அல்லது மூன்றாவது ஆப்ஷன் ப்ரிகோஜின் ரஷ்யாவில் இருந்து தப்பிக்க இப்படி தனது மரணத்தைப் போலியாகக் காட்டியிருக்கலாம். விரைவில் அவர் ஆப்பிரிக்காவில் இருந்து தான் உயிருடன் இருப்பதாக வீடியோவை வெளியிட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

Related Post