நெல்லைக்கு இனி இதுதான் அடையாளம்! பிரம்மாண்டமாக உருவான பொருநை..! என்ன ஸ்பெஷல்?

post-img
சென்னை: வரும் ஏப்ரல் மாதம் நெல்லையில் கட்டப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்துவைக்க இருக்கிறார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். சிந்துசமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகத்துடன் தொடர்பு கொண்டது என்பதை முதன்முதலாக உலகத்திற்கு ஆங்கிலேயத் தொல்லியல் அதிகாரி ஜான் மார்ஷல் அறிவித்தார். இந்த உண்மையை அவர் 1924இல் சொன்னார். அதனால்தான் அவரது நூற்றாண்டை தமிழக அரசு கொண்டாடியது. ஆக, திமுக நிறுவனர் அண்ணாதுரை 1948லேயே 'ஆரிய மாயை' புத்தகத்தில் ஜான் மார்ஷலை தனது வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது முதல் திராவிட நாகரிகத்தை உலக அரசில் பேச வைக்க வேண்டும் என்ற முயற்சி மேலோங்க ஆரம்பித்தது. அதே ஆர்வத்துடன் பூம்புகாரில் மு.கருணாநிதி அரசு அகழ்வாராய்ச்சிகளைச் செய்தது. ஆனால் எந்த ஆட்சியை விடவும் அதிகமாக அகழ்வாராய்ச்சி இந்த ஆட்சிக் காலத்தில் தான் நடந்து வருகிறது. முன்பே கீழடியில் ஒரு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் சோழ மன்னர்களின் வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டும் வகையில் ஒரு பிரம்மாண்ட அருங்காட்சியகத்தை அமைக்க உள்ளதாக அரசு அறிவித்திருந்தது. நெல்லை சீமையின் கட்டிடக்கலையை நினைவுபடுத்தும் விதமாகப் பொருநை அருங்காட்சியகம் இப்போது அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் திருநெல்வேலி நாகரிகத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக ரூ.15 கோடியில் 'பொருநை' அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அருங்காட்சியகம் பாளை கேடிசி நகரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் பைபாஸ் சாலையை ஒட்டி இருக்கும் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 13 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக இதன் கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட 75% முடிந்துவிட்டன. வரும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் இதனை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்க இருக்கிறார். தமிழ்நாட்டில் கீழடி, வாசுதேவ நல்லூர், கங்கைகொண்ட சோழபுரம் என மொத்தம் 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய மத்திய அரசின் ஒப்புதலைப் பெறப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கீழடியில் ஒரு பிரம்மாண்ட அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்துவைத்தார்.அதன் அடுத்த அதிசயமாகப் பொருநை அருங்காட்சியகம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இதன் பயன் என்ன? : நகரமயமாக்கல் என்ற நாகரிகம் தோன்றியது கங்கை சமவெளியில்தான் என்ற வாதம் பல ஆண்டுகளாக வரலாற்று ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டு வந்தது. ஆனால், அதற்கு இணையாக தென் தமிழ்நாட்டில் உள்ள கொற்கை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நகர நாகரிகம் நிலவியது எனத் தமிழ் இலக்கியங்கள் கூறிவந்தன. அதை முன்வைத்தே அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க தமிழக அரசு நிறைய அகழாய்வுகளில் ஈடுபட்ட முடிவெடுத்தது. பொருநை அருங்காட்சியகம் செயல்பாட்டுக்கு வந்தால் இந்தியாவின் வரலாற்றில் தமிழகம் நாகரிக அளவில் முன்னோடிச் சமூகம் என்ற உண்மை நிரூபிக்கப்படும். உதாரணமாகச் சொன்னால், கீழடியில் கண்டு எடுக்கப்பட்ட ஒரு நாணயம், மௌரியப் பேரரசு காலத்தைச் சேர்ந்தவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து பிறப்பதற்கு 400 ஆண்டுகள் முந்தைய காசு இது. அது தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்துள்ளது. அங்கிருந்த வணிகர்களுடன் தமிழர்கள் தொடர்பிலிருந்துள்ளனர். இந்த உண்மைகள் எல்லாம் அகழாய்வு மூலம் கிடைத்தவை. இது பற்றிப் பேசியுள்ள நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "தொல்லியல்துறை என்றால் மாநில அரசு நிதிநிலையில் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு என்பது இருக்காது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஆட்சியில் அதிக அளவு நிதியை முதல்வர் ஒதுக்கி இருக்கிறார். அகழ்வாராய்ச்சிக்காகவே ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார். தமிழக மக்களிடம் பெரிய அளவு விழிப்புணர்வை ஏற்படுத்தியது கீழடிதான். இந்த ஆய்வில் சில தொடர்புகள் கிடைத்தன. எனவே அதை முன்வைத்து வேறு இடங்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்ய அரசு முடிவு செய்தது” என்கிறார். தங்கம் தென்னரசு, வரலாற்றில் இருப்பு காலம் என்பது கங்கை சமவெளிப் பகுதிகளில் நிலவுவதற்கு முன்பாகவே தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய வட்டாரங்களில் தோன்றிவிட்டது என்றும் கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகள் முன்பே நாகரிகம் வளர்ந்த பகுதி தமிழ்நாடு என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார். பொருநையில் தனித் தனி கட்டடங்கள் உருவாகிவருகின்றன. முகப்பு அலுவலகம் மிகப் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறது. அதன் பின்னர் தனித் தனி காட்சியகங்கள் கட்டப்பட்டுள்ளன. ஏஐ வசதியுடன் ஒரு திரையரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.

Related Post