குமரி: கன்னியாகுமரியில் அமைந்துள்ள வள்ளுவர் சிலைக்கு கண்ணாடிப் பாலம் அமைக்கும் பணிகள் நிறைவை எட்டியுள்ளதால் விரைவில் அதனை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக இருக்கிறார்.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகளை நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வெள்ளிவிழாவைக் கொண்டாட முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தது. இந்தச் சிலை கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. இதை வடிவமைப்பதற்கான பணிகள் 1990இல் தொடங்கப்பட்டு1999 இல் முழு கட்டுமானமும் கட்டி முடிக்கப்பட்டது. அப்போது இதன் மொத்த பட்ஜெட் 6.14 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டது.
கடல் நடுவே இவ்வளவு உயரத்தில் சிலை அமைப்பது என்பது எளிதான காரியம் இல்லை. அங்கே இருந்த பாறை திட்டின் மீது வலிமையான சிலையை அமைக்க போதுமான தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலம். பொக்லைன் எந்திரங்கள், ஜேசிபி என பெரிய உபகரணங்களின் உதவியின்றி பழங்கால முறையில் மரக்கட்டைகளால் சாரம் அமைத்து கட்டுமான பணி கடல் நடுவில் மேற்கொள்ளப்பட்டது.
சிலையின் பாகங்கள் சென்னை மகாபலிபுரத்தில் உதிரி உதிரியாகச் செய்யப்பட்டு சாலை மார்க்கமாகக் கன்னியாகுமரிக்குக் கொண்டு செல்லப்பட்டது. கற்கள் மீனவ படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. இப்படிப் பல விதமான சவால்களுக்கு மத்தியில் சிலையை உருவாக்கினார் சிற்பி கணபதி ஸ்தபதி. இந்த சிலையின் மொத்த உயரம் 95 அடி ஆகும். அதற்குக் கீழ் பீடம் அமைக்கப்பட்டுள்ளது. சிலை அமைந்துள்ள பீடம் என்பது 13 அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ளது. வள்ளுவர் சிலை மட்டும் 21 அடுக்களைக் கொண்டது.
குமரி முனையில் உள்ள விவேகானந்தர் பாறையின் அளவு வெறும் 2400 சதுர அடிதான். சொல்லப் போனால் மிகச் சிறிய இடம். ஒரு வீடு கட்டுவதற்கான இடத்திற்கு தேவையான நிலம்தான். ஆகவே பெரிய அளவில் கட்டுமான என்பது கடினமான பணி. இந்தப் பாறையில் 7 ஆயிரம் டன் எடை கொண்ட சிலையை நிறுவுவது என்பது மெகா சாதனை. மொத்தம் 3681 கருங்கற்களைக் கொண்டு கட்டி இருக்கிறார்கள். அதனால்தான் 2004இல் ஏற்பட்ட சுனாமி பேரழிவையும் தாங்கி இந்த வள்ளுவர் சிலை இப்போது வரை நிலைத்து கம்பீரமாக நின்றுகொண்டுள்ளது.
இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட வள்ளுவர் சிலைக்கு சில காலமாக மக்கள் போக முடியாத நிலை இருந்து வந்தது. விவேகானந்த பாறைக்கு மட்டுமே படகு போக்குவரத்து இருந்து வந்தது. அதன் அருகே உள்ள வள்ளுவர் சிலைக்கான போக்குவரத்திற்குப் பயணத்திற்குப் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டன. ஆனால், அதை மீறிய ஒரு வியப்பான அனுபவத்தை மக்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டார்.
அதன் ஒரு பகுதியாக வள்ளுவர் பாறைக்கு நேரடியாக விவேகானந்தர் பாறையிலிருந்து மக்கள் நடந்தே செல்லும் வகையில் கண்ணாடிப் பாலம் கட்டும் பணிகளை மேற்கொண்டது அரசு. அதன் பணிகள் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கின்றன. இந்தப் பாலம் விவேகானந்த பாறையையும் வள்ளுவர் சிலையையும் நேரடியாக இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் கண்ணாடிப் பாலம் என்பதால் மக்கள் அதன் மீது நடக்கும் போது கடலின் அழகையும் அதன் அற்புதக் காட்சியையும் கண்ணாடி வழியே கண்டு ரசிக்கலாம். ஒரு த்ரிலிங் அனுபவத்தை இந்தப் பாலம் மக்கள் தரும் வகையில் இன்றைய மாடர்ன் டெக்னாலஜியுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இனி மக்கள் விவேகானந்தர் பாறையை மட்டும் பார்த்துவிட்டு, வள்ளுவர் சிலைக்குச் செல்ல முடியாமல் திரும்புகிறோமே என்ற ஏக்கத்துடன் வரத் தேவையில்லை.
கன்னியாகுமரிக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் மனநிறைவோடு இரண்டு இடங்களுக்கும் எளிமையாகச் செல்லலாம். மேலும் விவேகானந்தர் பாறைக்குத் தனியாகப் படகு கட்டணம், வள்ளுவர் சிலைக்குத் தனியாக ஒரு கட்டணம் என செலவழிக்க வேண்டிய தேவை இருக்காது. ஒரே செலவில் இரண்டையும் கண்டு ரசிப்பதுடன் ஒரு த்ரிலிங் அனுபவத்தைக் கூடுதலாகப் பெற முடியும்.
இந்தக் கண்ணாடி பாலம் ரூ. 37 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 97 மீட்டர் நீலமும் 4 மீட்டர் அலகமும் கொண்ட இந்தப் பாலத்தின் பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளன. விரைவில் இதனை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.