சென்னை: மத்திய அரசின் உளவுத்துறையான ஐ.பி. கண்காணிப்பில் காங்கிரஸ் கட்சியின் டாப் தலைவர் ஒருவர் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அந்த தலைவர் யார்.. அவர் கண்காணிக்கப்படுவது ஏன் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
.
இந்தியாவின் புலனாய்வுப் பணியகம் (IB) என்பது உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் உள் பாதுகாப்பு மற்றும் உளவு நிறுவனமாகும். இது 1887 இல் மத்திய உள்துறையின் சிறப்புக் கிளையாக நிறுவப்பட்டது. IB பெரும்பாலும் உலகின் மிகப் பழமையான புலனாய்வு அமைப்பாகக் கருதப்படுகிறது.
1968 வரை, இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுத்துறை இரண்டையும் கையாண்டது, அதன் பிறகு வெளிநாட்டு உளவுத்துறைக்காக ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு எனப்படும் ரா உருவாக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஐ.பி. மற்றும் ரா இரண்டும் சேர்த்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை கண்காணித்து வருகிறதாம். தமிழ்நாட்டில் அவரின் செயல்பாடு.. வெளிநாட்டில் அவரின் சமீபத்திய பணிகள் இரண்டையும் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
ஒரு அரசியல் தலைவர் அடிக்கடி வெளிநாடு என்றால் அவரை கண்காணிப்பது வழக்கம். அரசியல் தலைவர்கள் வெளிநாடு செல்வது சாதாரண விஷயம் கிடையாது. அதோடு எதிர்க்கட்சி தலைவர்கள் வெளிநாடு செல்வதும் சாதாரண விஷயம் கிடையாது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர்களின் பயணங்களை உன்னிப்பாக கண்காணிக்கிறது மத்திய உளவுத்துறையான ஐ.பி. குறிப்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஐ.பி.யின் கண்காணிப்பில் இருக்கிறார். அவரது அரசியலை கண்காணித்து வருகிற ஐ.பி. அதிகாரிகள், அவரின் வெளிநாட்டு பயணங்களை கூடுதல் கவனத்துடன் கண்காணிக்கின்றனர்.
கடந்த மாதம், தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் யாருக்கும் சொல்லாமல் திடீரென்று 1 வாரம் காணாமல் போனார் செல்வப்பெருந்தகை. அவர் சீக்ரெட்டாக சீனா சென்றிருப்பதை மோப்பம் பிடித்து டெல்லிக்கு தகவல் தந்தது மத்திய உளவுத்துறை. இவர் சீனா சென்றதுதான் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. சீனா ஏற்கனவே இந்திய அரசுக்கு எதிரான வேலைகளை செய்வதாக புகார்கள் உள்ளன.
அப்படிப்பட்ட நிலையில் அவர் சீனாவிற்கு சென்றதை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 20-ந்தேதி இரவு மும்பை வழியாக லண்டனுக்கு சென்றுள்ளார் செல்வப்பெருந்தகை.
இதனையும் மோப்பம் பிடித்த ஐ.பி. அதிகாரிகள், டெல்லிக்கு நோட் போட்டுள்ளனர். இதற்கிடையே, அமித் சாவை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்த கட்சி மேலிடம் செல்வப்பெருந்தகையிடல் வலியுறுத்திய நிலையில் ஒரே ஒரு நாள் மட்டும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி விட்டு சீக்ரெட்டாக லண்டனுக்கு பறந்துள்ளார். இதுவும் மத்திய அரசுக்கு தகவலாக சென்றுள்ளது.
அன்று முன்னாள் தலைவர் தங்கபாலு தலைமையில்தான் ஆர்ப்பாட்டம் நடந்தது. இப்படி அடிக்கடி சீக்ரெட்டாக வெளிநாடுகளுக்கு அவர் சென்று வரும் மர்மம் என்ன? என்று காங்கிரஸ் கட்சிக்குள்ளே சந்தேக விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. மத்திய அரசையும் இந்த தொடர் பயணங்கள் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்து உள்ளது. மிக முக்கியமாக செல்வப்பெருந்தகையின் வெளிநாட்டு பயணத்தில், முதலீடுகள் ஏதேனும் செய்யப்படுகிறதா? என்பதை ரா அதிகாரிகள் புலனாய்வு செய்வதாகவும் ஒரு தகவல் கிடக்கிறது.