திருச்சி: திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் காரில் கடத்தி வரப்பட்ட 7.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்த விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வருவோர், தங்கம் கடத்தி வருவதும், சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் பிடிபடுவதும் திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாகவும் தங்கம் கடத்தி வரப்படுகிறது. அவை சாலை மார்க்கமாக சென்னைக்கு கொண்டு செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. அண்மையில், இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட தங்கக் கட்டிகள், திருச்சி வழியாக சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், திருச்சி சமயபுரம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு காரில் 3 சூட்கேஸ்களில் சுமார் 7.5 கிலோ அளவுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 4 கோடி என்று கூறப்படுகிறது.
அந்த தங்க கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த காரில் இருந்த முகமது இர்பான், அஜ்மல் கான் இருவரையும் அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தங்கக் கட்டிகளை சென்னையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள அந்த நகை வியாபாரி யார் என்பது குறித்தும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கக் கட்டிகள் எப்படி கொண்டு வரப்படுகிறது, இதற்கு யார் உதவுகிறார்கள் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.