சென்னை: திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., தமிழக அரசுக்கும் திமுகவுக்கும் எதிராகவும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தற்போது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார் வேல்முருகன். மீனவர்கள் பிரச்சனையை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை சாடியுள்ளார் வேல்முருகன் எம்.எல்.ஏ.
இது தொடர்பான வேல்முருகன் அறிக்கை: மும்பை கடற்கரையில் இந்திய கடற்படையின் அதிவேகப் படகு மோதியதில் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் சென்றுகொண்டிருந்த பயணிகள் படகு கவிழ்ந்து 18.12.2024 அன்று விபத்துக்குள்ளானது. இதில் கடற்படை வீரா் ஒருவா் உள்பட 13 போ் உயிரிழந்தனா். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கடற்படையால் எதிர்பாராமல் நிகழ்த்தப்பட்ட இந்த பெரும் விபத்து என்பது துயரமும் கவலையையும் அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு முன் வந்திருப்பது வரவேற்கதக்கது. ஆனால், இந்த இழப்பீடு என்பது போதுமானது அல்ல; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 இலட்சமும், உயரிய மருத்துவ சிகிச்சையும் அளிக்க வேண்டும்.
அதே நேரத்தில், சிங்களப் பேரினவாத கடற்படையால், சுமார் 800க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 1000க்கும் மேற்பட்ட மீனவர்களின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
திருவண்ணாமலை மண்சரிவில் குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். ஆண்டுந்தோறும் மழை வெள்ளம் உள்பட இயற்கை பேரிடர்களால், ஏராளமானவர்கள் தமிழ்நாட்டில் உயிரிழந்திருக்கின்றனர்.
"இந்தியா எனது தாய் நாடு. இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தோர்" என்று நெஞ்சில் வைத்து நாம் பள்ளியிலிருந்து உறுதியேற்றோமே அந்தத் தாய் நாடு தான், ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டுக்கொன்றது.
இந்த பெரும் துயரத்துக்கெல்லாம் இதுவரை இரங்கல் தெரிவிக்காத பாசிச மோடி அரசு, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எவ்வித நிவாரணமும் கொடுக்க முன்வரவில்லை. தினசரி தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிங்களப் பேரினவாத கடற்படைக்கு ஒரு கண்டனமும் கூட தெரிவிக்கவில்லை.
குறிப்பாக, வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களை குருவிகள் போல வேற்று நாட்டவன் சுட்டுக் கொல்வதை பற்றி ஒன்றிய அரசுக்கு எந்த கவலையுமில்லை. நம் கண்முன்னேயே நமது இரத்த உறவுகள், குண்டு வீசிக் கொல்லப்படுகிறதே என வாய்விட்டு கண்ணீர் விடக் கூட நமக்கு உரிமையில்லை.
இந்தியர்கள் என்று தமிழர்களாகிய நாம், நம்மை நினைத்துக் கொண்டாலும், தமிழர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அநாதைகள் தான் என்பதை மோடி அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் தெளிவுப்படுத்தி வருகின்றன.
தமிழ்நாட்டில் அதிகப்படியான வரி வருவாயை கொள்ளையடித்து செல்லும் பாசிச மோடி அரசு, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு மட்டுமே அதிகப்படியான நிதி ஒதுக்கி தனது விசுவாசத்தைக் காட்டி வருகிறது.
ஆனால், கேட்க நாதியற்ற இனமான தமிழர்கள், மழை வெள்ள நிவாரணத்தை கூட, ஒன்றிய அரசிடம் பிச்சை எடுக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
ஒன்றிய அரசில் காங்கிரசு இருந்தாலும் பா.ஜ.க. இருந்தாலும் அது தமிழர்களுக்கெதிராக வஞ்சகத்துடன் செயல்பட்டு, தமிழர்களுக்கான உரிமையை மறுத்து வருகிறது. ஒன்றிய ஏகாதிபத்தியம் - தான் பறித்த உரிமைகளை விட்டுக் கொடுக்காது. ஒன்றிய ஏகாதிபத்தியத்தின் இருபெரும் கட்சிகள் பா.ஜ.க.வும் காங்கிரசும்! இவை பாரதமாதாவின் பிள்ளைகள்; தமிழர்களின் பகைவர்கள்.
அன்று இங்கிலாந்தின் காலனியாக இருந்தது தமிழ்நாடு; இன்று ஒன்றிய அரசின் காலனியாக இருக்கின்றது தமிழ்நாடு. அவ்வளவு தான் வேறுபாடு. இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.
வேல்முருகன் - திமுக கூட்டணி என்ன பிரச்சனை?
திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம் பெற்றுள்ளது. பண்ருட்டி சட்டசபை தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார் வேல்முருகன். திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளாக தம்முடைய பண்ருட்டி தொகுதிக்கு எந்த திட்டமும் கிடைக்கவில்லை என சட்டசபையில் பகிரங்கமாக குற்றம்சாட்டினார் வேல்முருகன். இது சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 2,000 மட்டும் வழங்கியதால் நாங்கள் பிச்சைக்காரர்களா? சென்னைக்கு மட்டும் ரூ 6,000 கொடுத்தீர்களே என தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். அதேபோல திமுக அரசில் அமைச்சர்கள் யாரும் மதிப்பது இல்லை; துணை முதல்வர் கூட தமது தொகுதிக்கு வந்த போது அழைத்து பேசவும் இல்லை என ஆதங்கப்பட்டிருந்தார் வேல்முருகன். இதனால் திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் வெளியேறக் கூடும் எனவும் கூறப்பட்டு வருகிறது.