சென்னை: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுன்டன்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார்(42) என்பவர் உத்தமபாளையத்திலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் நிலப்பிரச்சினையில் ஒரு கும்பல் தீர்த்துக்கட்டியது. இந்த விவகாரத்தில் பெண் இன்ஸ்பெக்டருக்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டிருக்கிறது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுன்டன்பட்டியைச் சேர்ந்த 42 வயதாகும் ரஞ்சித் குமார் உத்தமபாளையத்திலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். ரஞ்சித் குமார் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் தேதி நீதிமன்ற பணிகளை முடித்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் கம்பம் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் கோவிந்தன்பட்டியில் சென்று கொண்டிருக்கையில், அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத கும்பல், வக்கீல் ரஞ்சித் மீது காரை மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ரஞ்சித்குமாரை, அந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது.
நிலப்பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக 3 வழக்கறிஞர்கள் உள்பட 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கொடைக்கானலில் பதுங்கியிருந்த கார் ஓட்டுனர் செல்வம் என்ற சூப்செல்வம், ஆனந்தன் மற்றும் வழக்கறிஞர்கள் ஜெயபிரபு, மதன் இவர்களுடன் கூலிப்படையைச் சேர்ந்த ராஜேஸ், சஞ்சய், ராஜா, வேல்முருகன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் போலீசார் முன்கூட்டியே கொலையை தடுத்திருக்க முடியும் என்றும், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அளிக்கப்பட்ட புகாரை முறையாக விசாரிக்காததால் தன் சகோதரர் கொல்லப்பட்டதாக எம்.கே.செல்வேந்திரன் என்பவர் மாநில மனித உரிமை ஆணயத்தில் புகார் அளித்தார். தேனி மாவட்டம் குள்ளப்ப கவுண்டன்பட்டியை சேர்ந்த வக்கீர் ரஞ்சித்தின் சகோதரர் எம்.கே.செல்வேந்திரன் என்பவர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், தேனி மாவட்டம் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்த எனது சகோதரர் ரஞ்சித்குமாருக்கு சொத்து தகராறில் அச்சுறுத்தல் இருந்து வந்தது. எதிர் தரப்பினர் எனது சகோதரரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் இருந்து எனது சகோதரர் தப்பித்தார்.
கடந்த 2020-ம் ஆண்டு இதுதொடர்பாக அப்போதைய கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாவிடம் புகார் செய்தேன். போலீசாரின் விசாரணையில் எனது சகோதரரை கூலிப்படையினர் மூலம் கொலை செய்ய எதிர்தரப்பு திட்டமிட்டு வருவது தெரியவந்தது. இருந்தபோதிலும், எதிர்தரப்பினர் மீது இன்ஸ்பெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் புகார் அளித்த நாளில் இருந்து 25 நாட்களில் எதிர்தரப்பினரால் எனது சகோதரர் படுகொலை செய்யப்பட்டார். புகார் மீது இன்ஸ்பெக்டர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் எனது சகோதரரின் உயிரை காப்பாற்றி இருக்க முடியும். எனது சகோதரரின் உயிரிழப்புக்கு காரணமான இன்ஸ்பெக்டர் கீதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரரின் புகார் மீது வழக்குப்பதிவு செய்து அவரது சகோதரரின் உயிரை பாதுகாக்க வேண்டியது போலீசாரின் கடமையாகும். ஆனால், அதற்கு மாறாக மனுதாரரின் புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இன்ஸ்பெக்டர் கீதா செயல்பட்டது கடும் கண்டனத்துக்குரியது.
மனுதாரரின் புகார் மீது இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்திருந்தால் இந்த துயர சம்பவம் நடந்து இருக்காது. இன்ஸ்பெக்டரின் இந்த செயல் மனித உரிமை மீறல் ஆகும். எனவே, மனுதாரருக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். இதனை இன்ஸ்பெக்டர் கீதாவிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம்' என்று உத்தரவிட்டார்.