சென்னை: வடசென்னையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மழை வெள்ளத்தை தாங்கும் அளவுக்கு சென்னையின் உள்கட்டுமானம் மேம்படுத்தப்படுத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து தனது x தளத்தில், “வடசென்னை இனி வளர்ந்த சென்னை” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை வால்டாக்ஸ் சாலையில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், சென்னையை மழை வெள்ளத்திலிருந்து பத்திரமாக மீட்டிருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட அதிக மழை பெய்திருந்தும் ஏற்கெனவே எடுக்கப்பட்டிருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாதிப்புகள் குறைக்கப்பட்டிருக்கின்றன எனவும் உயிரிழப்புகளும் பெரும் அளவில் தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, “ஃபெஞ்சல் புயல் தமிழகத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயல் பாதிப்புகளில் இருந்து விரைவில் மீண்டு வருவோம். கடந்தகால ஆட்சியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் ஆட்சியாளர்களை களத்தில் பார்க்க முடியாது. திமுக ஆட்சியில் மழை வெள்ளத்தில் இருந்து அடுத்த நாளே சென்னை மீண்டுள்ளது.
தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு குறைந்துள்ளது. நிவாரணப் பொருள்களில் ஸ்டிக்கர் ஒட்டியது கடந்த கால ஆட்சியில்தான். சிலருக்கு விடியல் ஏற்படாது நான் மேயராக இருந்தபோது சென்னைக்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுவந்தேன். மக்களுக்கான நிவாரணப் பணிகளை திமுக அரசு தீவிரமாகச் செய்து வருகிறது.
சிலரின் விடியா முகங்களுக்கு எப்போதும் விடியல் ஏற்படாது. திமுகவுக்கு கிடைக்கும் பாராட்டுகளால் எதிர்க்கட்சிக்கு வயிறு எரிகிறது. பொதுமக்கள் கூறும் நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அதனை சரி செய்வோம் ஆரம்ப காலத்தில் சென்னை என்று சொன்னாலே அது வடசென்னைதான். வடசென்னைக்கு ரூ.6000 கோடிக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மக்களின் விருப்பங்களை வைத்து திட்டங்களைத் தீட்டி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
மேலும் வடசென்னை குறித்து தனது x பக்கத்தில், “சென்னை மாநகரின் எல்லை எத்தனைதான் பரந்து விரிந்தாலும் 'ஒரிஜினல்’ சென்னை நம் #வடசென்னை-தான்!
அந்த வடசென்னையின் வளர்ச்சிக்கான சிறப்பு அக்கறையுடன் ரூ. 6,309 கோடி எனும் பெரும் நிதி ஒதுக்கீட்டுடன் நமது #DravidianModel அரசு அறிவித்த வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் 2-ஆவது கட்டத்தை இன்று தொடங்கி வைத்தேன்.
முதற்கட்டத்தில் தொடக்கி வைத்த 87 பணிகளில் 29 பணிகளை எட்டே மாதங்களில் நிறைவேற்றி இன்று மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தேன்! வடசென்னை இனி வளர்ந்த சென்னை” என்று பதிவிட்டுள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage