சென்னையில் வசிக்கும் வெளியூர் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வெள்ள நிவாரண நிதி?

post-img

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு அறிவிக்கப்பட்ட வெள்ள நிவாரண நிதி உதவி வெளியூர் ரேஷன் கார்டு வைத்து சென்னையில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது தொடர்பான அரசாணை விரைவில் வரப்போகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2015ம் ஆண்டை விட சென்னையில் வெள்ளப்பாதிப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. அதேநேரம் அரசு அதிகாரிகள் தீவிரமாக இரவு பகலாக பணியாற்றி, சென்னையை இயல்பு நிலைக்கு விரைவாக கொண்டுவந்துள்ளனர். அதேநேரம் சென்னையில் தரைத்தளத்தில் குடியிருந்த மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் உடமைகள் வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். இதேபோல் பலரது இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், மின் சாதனங்கள், பழுதடைந்துள்ளன. பல வாகனங்கள், மின் சாதனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு 6000 ரூபாய் உதவி தொகையை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் பெருமழை பெய்த போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. அந்தத்தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையான 6000 ரூபாய் ரொக்கமாக ரேஷன் கடைகளில் தரப்பட உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வந்ததாலும், பலரும் ஏடிஎம் கார்டுகளை தொலைத்துள்ளார்கள்.. பெரும்பாலான ஏ.டி.எம்.கள் வேலை செய்யாத நிலை உள்ளது. பலர் வங்கி கணக்கை பராமரிக்கவில்லை. இதன் காரணமாக நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரத்தை ரொக்கமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாம்.
இதனிடையே ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் சென்னையில் வசித்து, பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கும் நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரத்தை வழங்க அரசு பரிசீலனை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் அதற்கான ஆதாரத்துடன் அவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விரிவான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் ரேஷன் கார்டு வெளியூர்களில் இருந்தாலும் சென்னை வசிக்கும் குடும்பத்தினருக்கு நிதியுதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுபற்றி விரைவில் அரசாணையில் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணத்தை வங்கியில் செலுத்தாமல் கைகளில் கொடுக்க இன்னொரு காரணமும் இருக்கிறதாம். பலரும் வங்கிக்கணக்கை பராமரிக்காமல் 'ஜீரோ பாலன்ஸ்'ல் வைத்திருப்பார்கள், நிவாரணத் தொகை வங்கியில் செலுத்தப்பட்டால், அதன் ஒரு பகுதி வங்கிக்கு சென்றுவிடும். அதுபோல் வங்கிக்கடன் தவணைகளை செலுத்தாமல் விட்டிருந்தாலும் நிவாரணத் தொகை செலுத்தப்பட்ட உடனேயே வங்கியால் எடுக்கப்பட்டுவிடும். அந்தத் தொகை அவர்களுக்கு உடனடி பயனிக்காமல் போய்விடக்கூடும் என்பதால் இப்பபடி செய்திருப்பதாகவும் சிலர் கூறுகிறார்கள்.

 

Related Post