சென்னை: தொடர் விடுமுறை முடிந்துள்ளதால் இப்போது பல்வேறு ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் திரும்பும் நிலையில், பல முக்கிய டோல்கேட்களில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர் விடுமுறையாக இருந்தது. அதாவது கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்பட்டது. இடையில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை விடுமுறை எடுத்தால் சனி மற்றும் ஞாயிறு, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி எனத் தொடர் விடுமுறையாக இருந்தது.
மேலும், பள்ளிகளுக்கும் இப்போது காலாண்டு தேர்வு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். இதனால் புதன்கிழமை பல சிறப்புப் பேருந்துகளும் கூட இயக்கப்பட்டன. பஸ், ரயில், ஆம்னி பேருந்துகள் என ஒட்டுமொத்த சென்னையும் காலியானது.
கடும் போக்குவரத்து நெரிசல்: இதற்கிடையே தொடர் விடுமுறை முடிந்துள்ள நிலையில், இப்போது சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் சென்னை நோக்கிப் படையெடுக்கிறார்கள். இதனால் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு அருகே சிங்க பெருமாள் கோயில் பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அந்தளவுக்கு அங்கே போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கிறது.
சென்னை மெட்ரோ ரயிலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்னைவாசிகள்.. செப்டம்பரில் தான் தரமான சம்பவம்
திருச்சி, மதுரை, கோவை எனச் சொந்த ஊரில் இருந்து மக்கள் பலரும் சென்னையை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள். இதனால் உளுந்தூர்பேட்டை, பரனூர் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. அதேபோல ஆத்தூரில் டோல்கேட்டிலும் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பனையூரில் இருந்து அக்கரை சந்திப்பு வரை நீண்ட தூரத்திற்குச் சாலைகளில் வாகனங்கள் காத்திருக்கிறது.
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்: திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து கடந்து செல்லும் நிலையே இருக்கிறது. டோல்கேட்டில் இருந்து சுமார் 2 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்கிறது.
கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கும் நிலையில், போக்குவரத்தைச் சமாளிக்க டோல்கேட்டில் எதிர்த் திசையிலும் மூன்று லேகன்களில் சென்னை செல்லும் வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டம் அதிகமாக இருப்பதால் விபத்து ஏற்படாமல் இருக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கிழக்கு கடற்கரைச் சாலை உத்தண்டி சுங்கச்சாவடியிலும் இதேபோல கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நாளை காலை ஒட்டுமொத்தமாக அனைத்து வாகனங்களும் சென்னையில் குவியும் என்பதால் நகரிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.