கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 11000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12000 கன அடியாக குறைந்துள்ளது. அணை நீர் மட்டம் 55.55 அடியாக உள்ளது.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர்.
இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்தது.
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 11000 கனஅடியாக குறைந்துள்ளது. இதனையடுத்து பிலிகுண்டுவிற்கு வரும் நீரின் அளவும் தற்போது 12000 கனஅடியாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 10000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு 10000 கன அடியாக உள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55. 75 அடியாகவும், நீர் இருப்பு 21 டி.எம்.சியாகவும் உள்ளது.
காவிரி ஆற்றில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டமும் குறையத் தொடங்கும். குறுவை சாகுபடி நிறைவடையப்போகும் நிலையில் சம்பா, தாளடி பருவ நெற்பயிர் சாகுபடி கேள்விக்குறியாகும் நிலை எழுந்துள்ளதாக காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இன்றைய தினம் கர்நாடகா மாநிலத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவினை அடுத்து காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கலாம்