சென்னை: தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களை புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் குழு இன்று மாலை சென்னைக்கு வருகிறது. நாளை காலை இக்குழு ஆய்வுகளை மேற்கொள்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது புதுச்சேரியிலும் குழு ஆய்வை செய்கிறது.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாவது இயல்பானதாக மாறியிருக்கிறது. இந்த ஆண்டு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் வட மாவட்டங்களை கடுமையாக பாதித்திருக்கிறது. குறிப்பாக விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் இன்னும் இந்த பாதிப்பிலிருந்து முழுமையாக மீளவில்லை. ஏராளமான அளவுக்கு நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளன. வீடுகள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கினற்ன.
தவிர சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் கனமழையால் பாதிக்கப்பட்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் அரசூரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் தேங்கியது. இதனால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. அதேபோல மரக்காணம் அருகே ரயில் பாலத்தில் வெள்ளம் தண்டவாளத்தை தொட்டு ஓடுவதால், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்த ரயில்கள் காட்பாடி, அரக்கோணம் வழியாக திருப்பிவிடப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. எனவே, 9வது நாளாக அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது மேற்குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களுக்கு மட்டும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மின்சாரம் இணைப்பு வழங்கப்படவில்லை. சாலைகளில் உள்ள பள்ளங்களை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப கடும் போராட்டங்களை சந்தித்து வருகின்றனர். வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மூன்று மாவட்டங்களில் பாதிப்பை எதிர்கொண்ட குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டிருந்தால் ரூ.10,000 வழங்கப்படும் எனவும், முற்றிலுமாக சேதமடைந்திருந்தால் அவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. புதுச்சேரி மக்களுக்கு ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இப்படி இருக்கையில் பேரிடர் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசு இன்று சென்னைக்கு வருகிறது. நாளை காலை பாதிப்புகளை குழு ஆய்வு செய்கிறது.
Weather Data Source: Wettervorhersage 21 tage