கோவையில் வீட்டின் உரிமையாளரே.. பார்த்த எக்குத்தப்பான வேலை.. பொறிவைத்து பிடித்த வாடகைதாரர்

post-img
கோவை: கோவையில் வாடகை வீட்டில் இப்படி எல்லாம நடக்கும் என்பது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கோவையில் கதவை பூட்டி விட்டு வெளியே சென்றபோது வாடகைக்கு குடியிருப்பவரின் நகைகளை வீட்டின் உரிமையாளரே திருடி சென்றுள்ளார். வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியால், நகைகளை திருடிய வீட்டின் உரிமையாளர் வசமாக சிக்கியுள்ளார். இந்த சம்பவம் கோவை கணபதியில் நடந்துள்ளது. கோவையை அடுத்த கணபதி குமரன்நகரில் 43 வயதாகும் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. இவரது வீட்டின் மேல்மாடியில் ஸ்ரீஹரி என்பவர் தனது மனைவியுடன் குடியிருந்து வருகிறார். ஸ்ரீஹரி சென்னையில் உள்ள தனியார் தொழிலநுட்ப நிறுவனத்தில் வேலை செய்கிறார். அதற்காக கோவையில் வீட்டில் இருந்தபடியே (WORK FROM HOME) வேலை செய்து வருகிறார். ஸ்ரீஹரி கடந்த மாதம் தனது பெற்றோர் வீட்டிற்கு மனைவியுடன் சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 15 கிராம் தங்க நகைகளை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டை பூட்டி விட்டு சென்ற நிலையில் நகை மாயமானதால் பெற்றோர் வீட்டில் அல்லது வேறு எங்காவது வைத்து விட்டோமோ என்று அவர்கள் கருதினர். இதையடுத்து ஸ்ரீஹரி மீண்டும் ஒரு நாள் தனது மனைவியுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் மேஜை மீது வைத்து சென்ற 14 கிராம் தங்கச்சங்கிலியையும் காணவில்லை.. வீடு பூட்டி இருக்கும்போது மீண்டும் மீண்டும் நகை திருட்டு போனது ஸ்ரீஹரிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் வீட்டில் நகைகள் திருட்டு போவதை கண்டுபிடிக்க திட்டமிட்டார்கள். அதன்படி அவர்கள் வீட்டில் ரகசியமாக கண்காணிப்பு கேமராவை பொருத்தி திருடர் யார் என்று கண்காணித்தனர். பொறி வைத்து காத்திருந்த அவர்கள், தங்களின் வீட்டில் புகுந்து கைவரிசை காட்டும் நபரை கண்டறிய வீட்டிற்குள் 13 கிராம் கைச்சங்கிலி, 6 கிராம் மோதிரம் வைத்தனர். அதன்பிறகு அவர்கள் பெற்றோர் வீட்டிற்கு செல்வது போல் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் வைத்து விட்டு சென்ற நகைகளை காணவில்லை. இதையடுத்து அவர்கள், தாங்கள் வீட்டில் பொருத்திய கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில், ஸ்ரீஹரி வீட்டை பூட்டி விட்டு சென்ற பிறகு வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணன் தன்னிடம் இருந்த சாவியை பயன்படுத்தி வீட்டின் கதவைத் திறந்து உள்ளே வருவதும், பின்னர் அவர் அங்கிருந்த தங்க நகையை திருடிச் செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது. அந்த காட்சி பதிவுடன் ஸ்ரீஹரி, போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், வாடகைக்கு குடியிருக்கும் ஸ்ரீஹரி இல்லாதபோது வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணன் கதவைத்திறந்து உள்ளே சென்று நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கிருஷ்ணனை அதிரடியாக கைது செய்தனர்.

Related Post