புதுச்சேரி: புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் சீகல்ஸ் ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். இந்த ஓட்டலை திரைப்பட இயக்குனரும், நடிகை நயன்தாராவின் கணவருமாகிய விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக கூறப்படுகிறது. இதை கேட்டு ஆடிப்போன புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், இது அரசு சொத்து என்றார். அதை ஒப்பந்த அடிப்படையிலும் தர முடியாது என்று மறுத்தார்.
போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் பிரபல நடிகையான நயன்தாராவை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும், படங்கள் தயாரிப்பது உள்பட திரை பணிகளை தாண்டி, வேறு பிசினஸ்களையும் செய்து வருகிறார்கள். நயன்தாரா அழகு சாதன பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஓட்டல் பிசினஸ்களிலும் அடியெடுத்து வைக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று இரவு 7 மணிக்கு சொகுசு காரில் புதுச்சேரிக்கு வருகை தந்தார். நேராக புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்கு சென்ற விக்னேஷ் சிவன், புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து ஓட்டல் தொழில் ஆரம்பிப்பது தொடர்பாக பேசினாராம்.
அப்போது விக்னேஷ் சிவன், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள 'சீகல்ஸ்' ஓட்டலை விலைக்கு (அரசுக்கு சொந்தமான ) கிடைக்குமா என்று பேசினார். இதனை கேட்ட அமைச்சர் லட்சுமி நாராயணன் ஒரு நிமிடம் ஆடிப்போனார். அதன்பின்னர் இயல்பாக மாறிய அமைச்சர், விக்னேஷ்... அது அரசு சொத்து என்று கூறினாராம். உடனே இயக்குனர் விக்னேஷ் சிவன், சீகல்ஸ் ஓட்டலை ஒப்பந்த அடிப்படையிலாவது வாடகைக்கு தருவீர்களா? என கேட்டாராம்.
அதற்கு அமைச்சர் லட்சுமி நாராயணன், 'புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் சீகல்ஸ் ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணி செய்து வருகிறார். எனவே அதனை ஒப்பந்த அடிப்படையில் வழங்க முடியாது' என்று மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் பேசிய விக்னேஷ் சிவன், புதுச்சேரி கடற்கரை பகுதிகள் தனியார் வசம் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றாவது கிடைக்குமா? என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு, அமைச்சர் பதில் அளிக்கையில், புதுச்சேரியில் உள்ள பல்வேறு கடற்கரைகள் கடந்த 2017-ம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டு ஏலத்தின் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தற்போது அதில் எதுவும் செய்ய முடியாது என்று கூறினாராம்.
அப்போது பேசிய விக்னேஷ் சிவன், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்த ஏதாவது இடம் கிடைக்குமா? என்று கேட்டாராம். அப்போது அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறும் போது, 'புதுச்சேரி துறைமுக வளாகத்தில் பொழுதுபோக்கு மையம் ஒன்றை கட்டி வைத்திருக்கிறோம். அங்கு ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்க இயலும். அதற்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துடன், ஜி.எஸ்.டி. சேர்த்து செலுத்தினாலே போதும். நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளலாம் என்று பதில் அளித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன், துறைமுக வளாகத்தில் உள்ள பொழுதுபோக்கு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். புதுச்சேரியில் அரசு ஓட்டலை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டது பரபரப்பாக பேசப்படுகிறது. இதனிடையே என்ன நடந்தது என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் விளக்கம் அளிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் திரையுலகில் உள்ளவர்கள்.