Exclusive: விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகியது ஏன்? புட்டு புட்டு வைக்கும் மூத்த பத்திரிகையாளர்!

post-img
சென்னை: ஆதவ் அர்ஜுனாவின் தொடர்ச்சியான திமுக எதிர்ப்பு பேச்சுகள், அதைத்தொடர்ந்த கூட்டணி குழப்ப நகர்வுகள்.. ஆதவ் அர்ஜுனா விலகலுக்குக் காரணம் ஆகியவை குறித்து மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் அப்பாஸ், நமது ஒன் இந்தியாவுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிக்கல் கொடுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வந்த விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் முழுமையாக கட்சியை விட்டு விலகியுள்ளார். வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனம் சார்பாக விசிகவுக்கு மாநாடுகளை நடத்தப் பணியாற்றிய ஆதவ் அர்ஜுனா இந்த ஆண்டு தான் விசிகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த வெறும் 21 நாட்களில் அவருக்கு விசிக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. லோக்சபா தேர்தலில் அவருக்காக பொதுத் தொகுதியும் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே அவர் கட்சியை விட்டே விலகியுள்ளார். விசிகவில் சேர்ந்ததுமே முன்னணி இடத்தைப் பிடித்த ஆதவ் அர்ஜுனாவுக்கு திருமாவளவன் ஆதரவாக இருந்து வந்தார். விசிகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரே ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகளை ரசிக்கவில்லை என்றாலும் கூட திருமாவளவன் ஆதவ் அர்ஜுனாவை நீக்க முன்வரவில்லை. அப்படி இருந்த சூழலில் ஆதவ் அர்ஜுனா விலகியது ஏன்? என்ன காரணம்? என நம்முடன் அலசுகிறார் மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் அப்பாஸ். ராஜகம்பீரன் அப்பாஸ் பேட்டி: "ஆதவ் அர்ஜுனா திட்டமிட்டுத்தான் விசிகவில் சேர்ந்தார் என்ற சந்தேகம் ஆரம்ப நிலையில் இருந்தே பல பேருக்கு இருந்தது. திருமாவளவன் பரந்து பட்ட சிந்தனையோடு, தேர்தல் வியூகத்தை உருவாக்கக் கூடிய ஒரு இளைஞர், கட்சிக்குள் வரும்போது அவரை வரவேற்றார். அதிலும் தலித் அல்லாதவருக்கு கட்சியில் உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துணை பொதுச் செயலாளர் பொறுப்பையும் அளித்தார். ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, விசிகவுக்கே எதிராக, தலைமையின் போக்குக்கே எதிர் நிலைப்பாட்டுடன், விசிகவுக்கு தான் ஒரு தலைவர் என்று கருதிக்கொண்டு, கூட்டணியில் பிளவு ஏற்படுத்தும் வகையில் பேசிக்கொண்டே இருந்தார் ஆதவ் அர்ஜுனா. ஏற்கனவே ஆதவ்வின் பேச்சு தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணைக்கு முயன்றபோது அதில் அவர் பங்கேற்கவில்லை. எல்லா கட்சியிலும் நடக்கும்.. ஆனால் இப்படி இல்லை: கட்சிக்குள் இதுபோன்ற விவகாரங்களை பேசுவது எல்லா கட்சிகளிலுமே உள்ளதுதான். கட்சித் தலைவரின் முடிவுகளையே கூட தவறு என்று கட்சியினர் விமர்சிப்பதும் உண்டு. ஆனால், அதை பொதுவெளியில் சொல்ல மாட்டார்கள். உட்கட்சிக் கூட்டங்களில், பொதுக்குழு செயற்குழுவில் பேசுவார்கள். ஆனால், ஆதவ் அர்ஜுனா எல்லாவற்றையுமே பொதுவெளியில் தான் பேசினார். தன் மீது வெளிச்சம் பாய்ச்சுவதற்கான வேலையைச் செய்துகொண்டே இருந்தார். திருமாவளவன், எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவு எடுக்கக்கூடாது என்ற அரசியல் பண்பாட்டின் காரணமாக ஆதவ் அர்ஜுனாவை இடைநீக்கம் மட்டும் செய்தார். அதன்பிறகு ஆதவ் அர்ஜுனா மீண்டும் கட்சியில் சேர்ந்து பணியாற்றும் எண்ணம் இருந்திருந்தால் அமைதி காத்திருப்பார். ஆனால், அதன்பிறகு இன்னும் வீரியமாக பேட்டிகளை அவர் கொடுத்தார். திருமாவளவனே சொன்ன பிறகும்: திருமாவளவனே எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை என வெளிப்படையாகச் சொன்னபிறகும் கூட, இல்லை உங்களுக்கு அழுத்தம் இருக்கிறது என முரண்பட்டு தானே தலைவர் போல பேசிக் கொண்டிருந்தார் ஆதவ். இதுபோன்ற அணுகுமுறை வேறு கட்சிகளில் இருந்தால் உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், அப்படியெல்லாம் இல்லாமல் நல்ல பண்பாட்டோடு திருமாவளவன் அமைதி காத்து வந்தார். ஆனால், எதைப் பற்றியும் கவலையின்றி ஆதவ் இஷ்டத்துக்கு பேசிக் கொண்டிருந்தார். விசிகவை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ஆதவ் அர்ஜுனா செயல்படுகிறார் என பலரும், விசிக இரண்டாம் கட்டத் தலைவர்களுமே கூட கூறினர். கடைசியில் திருமாவே சொல்லிவிட்டார்: ஆனால், திருமாவளவன் அப்படிச் சொல்லாமல் இருந்தார். ஆனால் ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் திருமாவளவனையும் இறுதியில் அப்படிச் சொல்ல வைத்துவிட்டது. அதன்பிறகு தான் வேறு வழியே இன்றி கட்சியில் இருந்து விலகுவதாக அன்றைக்கே அறிவித்தார் ஆதவ் அர்ஜுனா." இவ்வாறு நமக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் அப்பாஸ்.

Related Post