சூட்கேஸில் காதலன்.. முரட்டு விளையாட்டு.. அமெரிக்க காதலிக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு

post-img

வாஷிங்டன்: அமெரிக்காவில் கண்ணாமூச்சி விளையாடி காதலன், காதலி ஆகியோர் விளையாட்டில் உச்சகட்டமாக சில முயற்சிகளை செய்துள்ளனர். அதன்படி, விளையாட்டின்போது காதலரை சூட்கேசுக்குள் வைத்து காதலி பூட்டியுள்ளார். அதனால் என்னாச்சு தெரியுமா.. இறுதியில் காதலிக்கு அந்த செயலுக்காக வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காதலர்கள் செல்லமாக சண்டை போடும் போது, சில நேரம் கற்பனையிலும் நினைத்து பார்க்காத சம்பவங்கள் நடந்துவிடும். விளையாட்டுத்தனமாக செயயும் சில காரியங்கள் நமக்கே தெரியாமல் வினையாக மாறிவிடும். இப்போது நடந்த செய்திக்கு போகும் முன்பு, சென்னையில் கடந்த 2016ம் ஆண்டு ஒரு உண்மை சம்பவம் பற்றி பார்ப்போம். வடசென்னை பகுதியில் ஒரு காதல் ஜோடி வீட்டை எதிர்த்து ஓடிப்போய் திருமணம் செய்தனர். அவர்களை இருவீட்டாருமே ஏற்றுக்கொள்ளவில்லை.. எப்படியோ போராடி வாழ்க்கையில் தங்களை நிலைநிறுத்திக்கொண்டனர்.

அவர்களுக்கு ஓரு குழந்தை உள்ளது. நன்றாக சென்று கொண்டிருந்த தம்பதியின் வாழ்வில் குடிப்பழக்கம் விபரீததத்தை ஏற்படுத்தியது. அதுவும் விளையாட்டுத்தனமாக நடந்த சண்டையில் விபரீதம் ஏற்பட்டது. அந்த பெண் குழந்தையுடன் உட்கார்ந்து கொண்டிருந்திருக்கிறார். வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த கணவன், மனைவியிடம் சம்மதம் வாங்கி குடிக்க வேண்டும் என்று நினைத்து அவரிடம் அனுமதி கேட்டுள்ளார். அத்துடன் பணத்தையும் கேட்டுள்ளார். காதல் மனைவி பணம் தர மறுத்துவிட்டார். குடிக்கவும் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில் மனைவியிடம் கெஞ்சி பார்த்த அவர், ஒரு கட்டத்தில் பெட்ரோலை வண்டியில் இருந்து பெயருக்கு பிடித்துக் வாட்டர்கேனில் கொண்டு வந்தார். வாட்டர் கேனில் இருந்த சிறிதளவு பெட்ரோல் தன் மீது ஊற்றிக்கொண்ட அவர் பணம் கேட்டு விளையாட்டுத்தனமாக மிரட்டியுள்ளார். அப்போது திடீரென அவர், நாம் சிறிதளவு பெட்ரோல் தானே ஊற்றியுள்ளோம். படத்தில் வருவது போல், தீப்பற்ற வைத்து மனைவியிடம் விளையாடுவோம் என்று நினைத்து தீக்குச்சியை எடுத்து பற்ற வைத்துள்ளார். அது எதிர்பாராதவிதமாக அவரது கையில் பெட்ரோல் சிறிய அளவில் இருந்ததால், அப்படியே குப்பென்று பிடித்தது. அடுத்த சில நிமிடங்களில் மனைவி கண் முன்னே உயிரிழந்தார். மனைவி பெரும் துன்பத்திற்கு தள்ளப்பபட்டுள்ளார்.
இந்த சூழலில் அதேபோன்று தான் அமெரிக்காவில் கண்ணாமூச்சி விளையாடி காதலன், காதலி ஆகியோர் விளையாட்டில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரை சேர்ந்த 47 வயதாகும் பெண் சாரா பூன் என்பவரும், 42 வயதாகும் ஜார்ஜ் டோரஸ் (42) என்பவரும் காதலித்து வந்தனர். ஒரே வீட்டில் வசித்து வந்த இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந் தேதி வீட்டுக்குள் கண்ணாமூச்சி விளையாடியிருக்கிறார்கள்.

இருவரும் அதீத மதுபோதையில் இந்த விளையாட்டை விளையாடியிருக்கிறார்கள். விளையாட்டின்போது காதலர் ஜார்ஜ் டோரசை சாரா ஒரு சூட்கேசுக்குள் வைத்து பூட்டினார். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் சாரா, காதலன் தாமாக சூட்கேசில் இருந்து வெளியே வருவார் என நினைத்துக் கொண்டு தூங்க போய்விட்டார். மறுநாள் காலை எழுந்து காதலனை தேடியிருக்கிறார். பின்னர் அவரை சூட்கேசுக்குள் வைத்து பூட்டியது நினைவு வந்து பதறியடித்துக் கொண்டு சூட்கேசை திறந்தார். அப்போது ஜார்ஜ் டோரஸ் சூட்கேசுக்குள் பிணமாக கிடந்தார். அவர் மூச்சு திணறலுக்கு ஆளாகி இறந்தது அவருக்கு தெரியவந்தது. இந்த விவகாரத்தில் சாராவை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த வாரம் திங்கள் அன்று நடந்தது. இதில் சாரா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Related Post