36 லட்சம் ஓட்டு வாங்குகிற நாம் தமிழர், பிரிவினைவாத இயக்கமா? வருண் குமார் ஐபிஎஸ் மீது சீமான் சீற்றம்

post-img

கோவை: நாம் தமிழர் இயக்கம் பிரிவினைவாத இயக்கம் என்று திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி. வருண்குமார் ஐபிஎஸ் எதை வைத்து சொல்கிறார்? என அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சிக்கும் வருண்குமார் ஐபிஎஸ்ஸுக்கும் இடையே நடந்து வரும் மோதல் போக்கு அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த வகையில் சண்டிகரில் வருண்குமார், ஐபிஎஸ் மாநாட்டில் அக்கட்சி குறித்து பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியை நடத்தி வருகிறோம். தேர்தலில் நின்று 36 லட்சம் வாக்குகளை பெற்று, மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக நாம் தமிழர் கட்சி உள்ளது.
வருண்குமார் ஐபிஎஸ் எதனை வைத்து நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாதிகள் என்று சொல்கிறார்? அடிப்படை தகுதி இல்லாமல் எப்படி ஐபிஎஸ் ஆனார்? தமிழ், தமிழர் என்பது எப்படி பிரிவினைவாதம் ஆகும்? நடிகர் விஜய் மக்களுக்கு உதவ நினைப்பதை குறை சொல்ல முடியாது. எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருக்க நாங்கள் மன நோயாளி அல்ல.
தமிழகத்தில் இதுவரை புயல் பாதிப்புகளுக்கு, ஒன்றிய அரசு உதவி செய்யவில்லை. மாநிலங்கள் தரும் வரியை எடுத்து வைத்துக் கொண்டு, பேரிடர் காலங்களில் கூட ஒன்றிய அரசு உதவுவது இல்லை. குஜராத், பீகார் மாநில வெள்ள பாதிப்பு என்றால் உடனே ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதனை கேள்வி கேட்டால் ஆன்ட்டி இந்தியன் என்கிறார்கள்.

அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது கேவலமானது. 28 விழுக்காடு மக்கள் இரவு உணவு இல்லாமல் உறங்க செல்கிறார்கள். சொந்த நாட்டு மக்களின் உணவை உறுதி செய்ய வேண்டும். உணவு, உடை என்பது அவரவர் உரிமை. மாடு புனிதம் என்றால், எதற்காக மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்ய வேண்டும். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் நடந்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான 5ஆவது மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர் . பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தனர். இதில் கலந்து கொள்ள வருண்குமாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இணையதள மிரட்டல் , சைபர் கிரைம் உள்ளிட்டவை குறித்து பேச வருண்குமார் அறிவுறுத்தப்பட்டிருந்தார்.
அவர் பேசுகையில் , "எனது குடும்பம் இணையதள மிரட்டல் , சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தது. நாம் தமிழர் இயக்கம் கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம். நாதகாவால் நானும் என்னுடைய குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம் . எனது குடும்ப புகைப்படத்தை நாம் தமிழர் கட்சியினர் இணையத்தில் பதிவிட்டிருந்தனர்.

இது குறித்து 2 எப்ஐ ஆர் பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை . அது போல் இணையதளத்தில் அவர்கள் போட்ட பதிவுகளை நீக்க கோரியும் அவை நீக்கப்படவில்லை". இவ்வாறு வருண் குமார் பேசியிருந்தார். தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில், நாம் தமிழர் கட்சியை ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று வருண்குமார் கூறியிருப்பது தற்போது அரசியல் களத்தில் பரபரப்பாக மாறியுள்ளது.

Related Post